தருமபுரி புத்தகத் திருவிழாவில் உண்டியல் சேமிப்பு மூலம் புத்தகங்கள் வாங்கிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி புத்தகத் திருவிழாவில் உண்டியல் சேமிப்பு தொகை மூலம் புத்தகங்கள் வாங்கிய சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருடன் புத்தகத் திருவிழா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்.
தருமபுரி புத்தகத் திருவிழாவில் உண்டியல் சேமிப்பு தொகை மூலம் புத்தகங்கள் வாங்கிய சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருடன் புத்தகத் திருவிழா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்.
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சின்னப்பள்ளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் உண்டியல் சேமிப்பு மூலம் புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

தருமபுரியில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் 5-ம் ஆண்டு புத்தகத் திருவிழா வள்ளலார் திடலில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவின் போது, பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரை அப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி அழைத்து வந்தார்.

அப்போது, ‘அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது புத்தகங்கள் வாங்கும் வகையில் மாணவ, மாணவியர் அனைவரும் உண்டியலில் பணம் சேர்த்து வையுங்கள்’என்று அறிவுறுத்தி உண்டியல்கள் வாங்கிக் கொடுத்தார். அந்த உண்டியலுடன் நடப்பு ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு வந்த மாணவ, மாணவியர் 100-க்கும் மேற்பட்டோர் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்துக்கு ஏற்ப ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கினர்.

மேலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி திருக்குறள் புத்தகங்கள் வாங்கி பரிசளித்தார். உண்டியல் சேமிப்பின் மூலம் புத்தகங்கள் வாங்கிய அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை தகடூர் புத்தகப் பேரவை அமைப்பின் செயலாளர் மருத்துவர் செந்தில், தலைவர் சிசுபாலன் ஆகியோர் பாராட்டியதுடன், சிறு சேமிப்பு மற்றும் வாசிப்புப் பழக்கங்களை வாழ்வில் எந்த நிலையிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். நிகழ்ச்சியின்போது, பள்ளி ஆசிரியர்கள் பழனிச் செல்வி, கல்பனா, திலகவதி, ரேகா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குழந்தைகளுக்கு புத்தகங்கள்...: தருமபுரி புத்தகத் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு ‘சித்திரம் பேசுதடி’ என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா பேசியது: நிறைய எழுதுவதன் மூலம் தெரிவிக்கும் ஒரு கருத்தை ஒரு சித்திரம் மூலம் சொல்லிவிட முடியும். சித்திரங்கள் எப்போதும் அழகானவை. எனவே தான் இலக்கியங்களிலும், கதைகள், நாவல்கள் உள்ளிட்ட புத்தகங்களிலும் சித்திரங்கள் இடம் பெறுகின்றன.

அவற்றின் வழியாக பாத்திரப் படைப்புகளும், அறக் கருத்துக்களும் படிப்போரிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. அதேபோல, பெற்றோர் தங்களின் குழந்தைகளை புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே புத்தகங்களையும் அவர்களுக்கு வாங்கித் தர வேண்டும். இதன் மூலம் குழந்தைகளை அறிவார்ந்தவர்களாக உருவாக்க முடியும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in