

சிவகங்கை: சிவகங்கை அருகே மல்லல் ஆதிதிராவிடர் நல அரசு மேல் நிலைப் பள்ளி அடிப்படை வசதிகள் இன்றியும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.
மல்லலில் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மல்லல், பெரிய கண்ணனூர், கண்ணகிபுரம், செம்பனூர், இரும்பூர், மென்மேனி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிக் கட்டிடத்தை முறையாக பராமரிக்காததால் தரை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. போதிய வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
குடிநீர் வசதி இல்லாததால் மாண வர்கள் வீட்டிலிருந்து குடிநீர் கொண்டு வரும் நிலை உள்ளது. சுற்றுச் சுவர் இடிந்து கிடக்கிறது. அதேநேரம், பள்ளியில் நாப்கின் எரிக்கும் இயந்திரம் இல்லாததால், மாணவிகள் பயன்படுத்திய நாப் கின் களை கழிப்பறையிலேயே போட்டுச் செல்கின்றனர். இதனால் கழிப்பறை சுகாதாரமற்று மோச மான நிலையில் உள்ளது..
இது குறித்து பெரிய கண்ணனூர் திருமாறன் கூறியதாவது: இப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் பராமரிப்பின்றி பள்ளி மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கூட இல்லை. கழிப்பறையும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். சுற்றுச்சுவர் சேதம் அடைந்ததால் கால்நடைகள் நடமாடுகின்றன என்று கூறினார்.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் கட்ட அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். விரைவில் 4 வகுப் பறை கட்டிடங்கள் கட்டப்பட உள் ளன’’ என்று கூறினர்.