

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில், கடந்த 1939-ம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, 2013-ம் ஆண்டு வரை நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்தது.
இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 2014-ம் ஆண்டு மாக்கினாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு மாக்கினாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பாலமநல்லூர், வைகை நகர், கல்லாங்காடு, ஜோதி நகர், அமைதி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்ததையடுத்து, சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2018-ம் ஆண்டு இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப் படுவார்கள் என அப்போதைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்தார். தொடக்கப் பள்ளி மட்டும் கான்கிரீட் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மாக்கினாம்பட்டி ஊராட்சி திருமலை நகரிலுள்ள கிராம சேவை மைய கட்டிடத்துக்கு தற்காலிகமாக மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும், தற்போது வரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது வரை நிதி கிடைக்காததால், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
இதனால், தற்போது வரை சேவை மைய கட்டிடங்களிலேயே பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் 260 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், இந்த கட்டிடங்களிலேயே சேவை மையமும் செயல்படுகிறது. இட நெருக்கடியால் 260-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்களும், கல்வி ஆர்வலர்களும் கூறும் போது, "அரசு விதிமுறைப்படி பள்ளி வகுப்பறை 20 அடி நீளம், 20 அடி அகலம் கொண்டதாகவும், இரண்டு வழிகளும் இருக்க வேண்டும். ஆனால், மாக்கினாம்பட்டி சேவை மையத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பறை கூட அரசின் விதிமுறைப்படி இல்லை.
அந்த கட்டிடம் சேவை மையத்துக்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. மிகச் சிறிய அறைகளில் மாணவர்கள் மிக நெருக்கமாக காற்றோட்டம் இல்லாமல் அமர்ந்து படிக்கின்றனர். மேலும், வகுப்பறைக்கு ஒரு வழி மட்டுமே உள்ளது. தலைமை ஆசிரியருக்கும் அறை இல்லை. தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புக்களுக்கு 10 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், இங்குள்ள 7 சிறிய அறைகளில் மாணவர்கள் இட நெருக்கடியில் 5 ஆண்டுகளாக படித்து வருகின்றனர்.
சில தன்னார்வலர்கள் மூலமாக தகர சீட்டால் மேற்கூரை அமைக்கப்பட்டு, அதிலும் வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. 260 மாணவர்களுக்கும், 14 ஆசிரியர்களுக்கும் மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. குடிநீர் வசதி இல்லாமல் மாணவர்கள் வீடு, வீடாகச் சென்று குடங்களில் வாங்கி வருவதை கண்ட தன்னார்வலர்கள் சிலர், 2 தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அளித்தனர்.
இப்படி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2022 - 23ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 160 மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். அவர்களுக்கான சத்துணவு மையம் பழைய பள்ளி வளாகத்தில் செயல்படுவதால், மதிய உணவு சமைத்து தினசரி ஆட்டோவில் எடுத்து வரப்பட்டு வழங்கப்படுகிறது. ஆட்டோவுக்கு தன்னார்வலர் மூலமாக வாடகை தொகை வழங்கப்படுகிறது" என்றனர்.
பள்ளி நிர்வாகம் கூறும்போது, "பழைய பள்ளி கட்டிடம் சேதமடைந்திருந்ததால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு மாற்றப் பட்டனர். புதிய கட்டிடம் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.