

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புக்கான சிறப்பு பிரிவு, 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவுத் தொழில்நுட்பம் (பி.டெக்) ஆகிய படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2023-2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 26-ம் தேதிதரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டது.
அதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த 16-ம் தேதி நடந்தது. இதில் 36 பேருக்கும், நேற்று முன்தினம் நடந்த 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 45 பேருக்கும் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.
நேற்று நடந்த பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1,476 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், கலந்தாய்வில் பங்கேற்ற 185 பேரில் தகுதியான 78 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஆக.19-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல், வரும் 22-ம் தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நடைபெறுகிறது.இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கடிதத்தை வரும் 25-ம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்.8-ம் தேதிக்குள் தேர்வு செய்தகல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.21 முதல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீட்டில் 119 எம்பிபிஎஸ், 85 பிடிஎஸ் மற்றும்நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்பிபிஎஸ், பிடிஎஸ் 818 இடங்கள் காலியாகவுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மட்டும் அரசு ஒதுக்கீட்டில் 1 எம்பிபிஎஸ், 20 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் ஆக.21-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆக.21-ம் தேதி காலை 10 மணி முதல் 22-ம் தேதிமாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் பதிவு செய்யலாம். 24-ம் தேதிகாலை 10 மணி முதல் 28-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். 29, 30-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 31-ம் தேதி இடஒதுக்கீடுசெய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.