

சி
த்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட திருநங்கை தாரியா பானு தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவத் துறைத் தேர்வாணையம் ஆகியவை நடத்தும் தேர்வுகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு ஏன் செயல்படுத்தவில்லை என்றும் கேட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளைத் தமிழக அரசு நான்கு மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்விக்கு இடம் ஒதுக்கப்படுவதில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதோடு சமூக நிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்களை வழங்கும் திட்டத்தையும் பரிசீலிக்கலாம். இட ஒதுக்கீடு எனும்போது சில இடங்களை மட்டுமே பெற முடியும். கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்போது நிறையப் பேர் பயன்பெற வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28 அன்று ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்துப் பேசியுள்ளதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஹரியாணா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கணவனை இழந்த பெண்களுக்குக் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் 15 வயதுக்குள் தந்தையை இழந்தவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்று கட்டார் தெரிவித்துள்ளார். கணவனை இழந்தவர்களுக்கான இந்தச் சலுகைகள் ஏற்கெனவே ஹரியாணா மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன. ஆனால், அவை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அவை அனைத்து விதமான அரசுப் பணிகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.
சத்துணவுத் திட்டத்தை எம்ஜிஆர்தொடங்கியபோது, கணவனை இழந்தவர்களுக்கும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் அதிக அளவில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிகள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக, மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. எனவே, தமிழகத்துக்கு இத்தகைய சலுகைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனை இழந்தவர்களுக்கும் இளம்வயதில் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களோடு கூடுதல் மதிப்பெண்களை அளிக்கும் திட்டத்தை ஹரியாணா முதல்வர் அறிவித்திருப்பது நிச்சயமாக ஒரு முன்னோடித் திட்டம்.
தமிழகம் முழுவதும் பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள்வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிற குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளின் விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்க முடிகிறது. குறைவான ஊதியம், மிகுந்த பணிச்சுமை என்றபோதும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கு, அவர்களுக்கு அரசு வேலை அல்லது நிரந்தர வேலையைப் பெறும் லட்சியம் இருப்பது மட்டுமல்ல காரணம்; அதன் வழியாக, சமூகப் படிநிலைகளில் அழுத்தப்பட்டுக் கிடப்பவர்களும் பொருளாதார நிலையில் நலிவடைந்து கிடைப்பவர்களும் ஒரு அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார்கள் என்பதும் ஒரு காரணம். கிராம நிர்வாகம் என்பது ஒவ்வோர் ஊரிலும் கர்ணம் என்னும் பெயரில் உயர்சாதிக்காரர்களின் அதிகாரமாக இருந்த காலமும் ஒன்றுண்டு. எம்ஜிஆர், கிராம நிர்வாக அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கியதன் மூலமாக ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திட்டார். இன்று ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பெண்களும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியிருக்கிறார்கள்.
பணியிடங்களில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றங்களால் சமூகத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் பயனடைய வேண்டும் என்றால், பிறப்பு, பாலினம் மற்றும் தாய்மொழிக் கல்வி என்ற அடிப்படையில் பணியிடங்களை ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது. கையறு நிலையில் நிற்கும் பெண்களும் பெற்றோரை இழந்த பிள்ளைகளும்கூடப் பயன்பெற வேண்டும். ஹரியாணா முன்னெடுத்துள்ள இந்தக் கூடுதல் மதிப்பெண் சலுகையைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துவது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே மாகாண அளவில் உருவாக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்று பெருமை கொள்ளும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் மற்ற மாநில தேர்வாணையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மனதில் கொள்ள வேண்டும்!