

தமிழறிஞர் மா.நன்னன் (1923-2017)
பண்டிகை நாட்களில் தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்ப்பவர்கள், திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் என்பதாகத்தான் பெரும்பாலும் தமிழ்ப் பேராசிரியர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அதற்கு விதிவிலக்காக இருந்தவர் தமிழறிஞர் மா.நன்னன் .
‘எண்ணும் எழுத்தும்’ என்ற பெயரில் பொதிகை தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள், அதன் பிறகு ‘அன்னை மொழி அறிவோம்’ என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சியிலும் தமிழைப் பேசவும் எழுதவும் அடிப்படை இலக்கணங்களைச் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர் அவர். 1990-ம் ஆண்டு தொடங்கி மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் தமிழ் இலக்கணம் குறித்த நூல்களையும் பெரியாரியல் குறித்த அறிமுக நூல்களையும் அவர் எழுதத் தொடங்கினார். 70-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் இருக்கிறார்.
விருத்தாசலத்தை அடுத்துள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் நன்னன். எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிப்பைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார். இளம் வயதிலேயே ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது தனித்தமிழ் ஆர்வத்தின் காரணமாகத் திருஞானசம்பந்தன் என்ற தனது இயற்பெயரை நன்னன் என்று மாற்றிக்கொண்டார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக் கல்லூரி என்று தம்மை மென்மேலும் உயர்த்திக்கொண்டு பேராசிரியர் நிலையை அடைந்தார். 1980-83 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பதவிவகித்தார்.
தொடக்க காலம்தொட்டே, திராவிட இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் நன்னன். பெரியார், அண்ணா தொடங்கித் தற்போதைய தலைவர்கள்வரைக்கும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். இருந்தபோதும் அவர் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் தமிழ்ப் பணிக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், தனது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ‘நன்னன் குடி’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார்.
அதன் சார்பில் ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, ரூ.20,000வரையில் பரிசுகளையும் வழங்கினார். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னும் அவர் மாணவர்களிடம் கொண்டிருந்த அக்கறைக்கு இது ஒரு சான்று.
இன்றைய காலகட்டத்தில், மாணவர்களின் வாசிப்பு மேஜைகளில் ஆங்கில அகராதி தவறாமல் இடம்பிடித்திருக்கிறது. மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளின் புதிய பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சொற்களைத் தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம் தமிழில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் சொற்களை அறிந்துகொள்வதில் இல்லாமல் போய்விட்டது. தாய்மொழி அல்லாத எந்தவொரு மொழியில் பேசினாலும் எழுதினாலும் அம்மொழியில் போதிய புலமையை எட்டுகிறவரை, மனம் தனக்குள்ளாகவே தாய்மொழியில் சிந்தித்துப் பின்பு அதை மொழிமாற்றம் செய்துகொள்கிறது என்கிறார்கள் மொழியியலாளர்கள்.
எனவே, தாய்மொழியில் இருக்கும் தேர்ச்சி எந்தவொரு அந்நிய மொழியையும் பயன்படுத்துவதற்கு அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருக்கும். எனவே, ஆங்கிலமோ வேறு எந்த மொழியோ நாம் அதைச் சிறப்பாகக் கையாள்வதற்கும்கூடத் தமிழில் மொழிசார்ந்த அடிப்படைகளை அறிந்துவைத்திருப்பது அவசியம். பள்ளிப் படிப்பில் தாய்மொழியையும் ஒரு பாடமாக வைத்திருப்பது அதனால்தான்.
கலை, அறிவியல் படிப்புகளில் மட்டுமின்றி சில தொழிற்கல்வி படிப்பிலும் மாணவர்களுக்கு மொழிப்பாடம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது. ஆனாலும், பாடத்திட்டத்தைத் தாண்டி நாம் தமிழை அறிந்துகொள்ள விரும்புவதில்லை. அல்லது பள்ளி அல்லது கல்லூரிப் படிப்போடு நமது மொழிக்கல்வி முற்றுப்பெற்றுவிடுகிறது. படிக்கும் பாடங்களில் இருக்கும் துறைசார்ந்த அறிவு வேலைவாய்பைப் பெற்றுத் தரலாம்.
ஆனாலும், பணியிடங்களுக்கு வெளியிலும், சமூகத்துடன் நாம் உறவாடுவது பெரும்பாலும் தாய்மொழியில்தான் என்கிறபோது அதை இன்னும் சரியாகக் கையாளுவது நமக்குப் பெரும்பயன் தரும். எல்லாவற்றையும் தாண்டி, தமிழைப் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் நமது பண்பாட்டைக் காக்கும் முயற்சியும்கூட. அதற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் நன்னன்.
இணையத்தில் நன்னன்
தமிழ் எழுத்துகளை எளிதாகக் கற்றுக்கொள்ளும்வகையில் அவர் அறிமுகப்படுத்திய புதிய பயிற்சி முறைக்கு ‘நன்னன் முறை’ என்று பெயர். அதன்படி 609 சொற்களின் வழியாகத் தமிழில் உள்ள 216 எழுத்துகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். நன்னன் முறையையொட்டி அவர் எடுத்த வகுப்புகளின் காணொலிக் காட்சிகள், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்தில் காணக்கிடைக்கிறன. தள இணைப்பு - goo.gl/jMffDq
நன்னனின் சில நூல்கள்
# தமிழ் எழுத்தறிவோம்
# நல்ல உரைநடை எழுத வேண்டுமா?
# தவறின்றித் தமிழ் எழுதுவோம்
# செந்தமிழா? கொடுந்தமிழா?
# எழுதுகோலா? கன்னக்கோலா?
# தமிழா! எது வேண்டும்? தமிழா? கிமிழா?