

சென்னை: விஐடி சென்னையில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கவிழா நேற்று (ஆக. 7) நடைபெற்றது. இவ்விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் பேசுகையில் ``வி.ஐ.டியில் வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. மாணவர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு பல்வேறு கவனச் சிதறல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து விலகி நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
விஸ்டியன் கார்ப்பரேஷன் துணைத் தலைவர் திரு.பர்கத்துல்லா கான் பேசுகையில், ``மாணவர்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். கல்லூரியில் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்களின் அடுத்த 40 ஆண்டுகளின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது'' என்றார்.
மியான்மர் கவுரவ தூதர் பேராசிரியர் ரங்கநாதன் உரையாற்றும்போது, ``கல்வி ஒரு பயணம், அது இலக்கு அல்ல. இளைஞர்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலமேதான் நாட்டுக்குத் தேவையான வளர்ச்சியை எட்ட முடியும். தோல்வியைக் கண்டு மாணவர்கள் பயப்படக் கூடாது'' என்றார்.
தகவல் தொழில் நுட்ப வல்லுநரும் ராம்கோ சிஸ்டம்ஸ் முன்னாள் துணைத் தலைவருமான முத்தழகி பேசும்போது, ``மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட திறன்கள், புதுமையான திறன் மற்றும் படைப்பாற்றலை உருவாக்க வேண்டும்'' என்றார்.
விஐடி இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார். விஐடி சென்னையின் வணிகத் துறைத் தலைவர் கே.ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார். விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், கூடுதல்பதிவாளர் பி.கே.மனோகரன்மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.