

சென்னை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நாளை (ஆக.4) நடக்கிறது. இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப் பட்டது.
இதுதவிர பள்ளிகளில் எஸ்எம்சிகூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நடப்பு மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நாளை (ஆக.4) மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பள்ளி வளர்ச்சி பணிகள், துணைத்தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை, முன்னாள் மாணவர் அமைப்பு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்தக் கூட்டத்தில் எஸ்எம்சி குழுவில் உள்ள ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகளை அவசியம் பங்கேற்க வைக்க வேண்டும். இதில் எடுத்த முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும், எஸ்எம்சி குழு கூட்டவிவரங்களை தொகுப்பு அறிக்கையாக இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.