

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக கழிப்பறைகள் பூட்டியிருக்கின்றன. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று முன்தினம் திறந்து வைத்திருந்தார். இது பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒருசில பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
வள்ளியூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு ஆண்டுக் கணக்கில் கழிப்பறைகளை பூட்டி வைத்திருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. பூட்டிக் கிடக்கும் கழிப்பறைகள்: வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 950 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.
இப்பள்ளியில் 2015-2016, 2019-2020 காலகட்டங்களில் ராதாபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்டப்பட்டன. ஆனால் இதுவரை அந்த இரு கழிவறைகளும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பயன்பாடில்லாத இந்த கழிவறைகளை சுற்றிலும் தற்போது புதர்கள் வளர்ந்துள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் அதை சுற்றியுள்ள பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் உருவாகியிருக்கிறது. இப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிப் பறைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.