Published : 30 Jul 2023 06:59 AM
Last Updated : 30 Jul 2023 06:59 AM
சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தை இன்றுமுதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த இரண்டு அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,517 இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்கள் இருக்கிறது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2022-23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று (ஜூலை 30) தொடங்குகிறது. www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் ஆக. 14-ம் தேதிமாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியர்மூலமாக ஆக. 14-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை-600 106’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடுஇடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.இத்தகவல்களை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT