ஆயிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து பயிலும் அவலம்
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது ஆயிக்குப்பம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 86 மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளிக் கட்டிடம் சேதமடைந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் சற்று தொலைவில் இரு அறைகள் கொண்ட மற்றொரு கட்டிடத்துக்கு தற்காலிகமாக இப்பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்த பணியை அந்த ஊராட்சிப் மன்றத் தலைவரே மேற்கொள்வதாகத் தெரிகிறது.
கடந்த ஓராண்டாக கட்டுமானப் பணி நிறைவடையாத நிலையில், போதிய இடவசதி இல்லாமலும், கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் 200 சதுர அடி பரப்பளவுக் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்தில் இந்த 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்தக் கட்டிடத்தின் முன்புற வராண்டா உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
இந்த இரு அறைகளில், ஒரு அறையின் ஒரு பாதி இடத்தில் தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் இருக்கைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதனாலும் இடநெருக்கடி நிலவுகிறது. மாணவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் அமர்ந்திருப்பது போல உட்கார்ந்து படிக்கும் நிலை உள்ளது.
ஒருவித கசகசப்புடன் இருப்பது இந்த மாணவர்களை மன உளைச்சலில் தள்ளுகிறது. பள்ளியின் 3 மற்றும் 4-ம் வகுப்பு மாணவர்கள், முன்புற வராண்டாவில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மழைபெய்தால் அந்த வராண்டாவில் இருக்க இடமின்றி தற்காலிகமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழலே உள்ளது.
இருக்க இடமே இல்லாத சூழலில், மாணவர்களுக்கு கழிப்பறையும் கிடையாது. அருகில் உள்ள திறந்த வெளியையே இயற்கை உபாதைக்கு பயன்படுத்துகின்றனர். பள்ளிக் கட்டிடம் தற்காலிகமாக மாற்றப்பட்டாலும், மாணவர்களுக்கான சத்துணவுக் கூடம், பழைய பள்ளி அருகிலேயே இயங்கி வருகிறது.
மாணவர்கள் ஏறத்தாழ 1 கி.மீ நடந்து சத்துணவு கூடத்துக்கு சென்று, தட்டில் உணவை வாங்கி வந்து, இங்குள்ள பள்ளிக் கட்டிடத்தில் அமர்ந்து உண்ண வேண்டும். வரும் வழியில், உணவுடன் முட்டையையும் கொண்டு வரும் சிறார்கள் தெரு நாய்களைக் கண்டு மிரள்வதும், அச்சத்துடன் ஓடுவதும் நடப்பதாக இங்குள்ள ஆசிரியர்களே வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர்.
“ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை நிர்வகிப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. வரும் மாணவர்களை தக்க வைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை நிர்வகிக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் காட்டும் அலட்சியம், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறது” என்கின்றனர் ஆசிரியர்கள், இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞான சுந்தரத்திடம் கேட்டபோது, “புதிய பள்ளிக்கான கட்டுமானப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்து விடும்” என்றார்.
புதிய பள்ளிக் கட்டிடத்தின் தற்போதைய நிலை.
ஆனால். பள்ளிக் கட்டித்தின் கான்கிரீட் தளம் இரு தினங்களுக்கு முன்னர் தான் போடப்பட்டதாக கூறும் கிராம மக்கள், கான்கிரீட் தளம் செட்டாகவே ஒரு மாதம் பிடிக்கும், இன்னும் பூச்சு வேலை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, தரை போடுதல், கட்டிடத்திற்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இன்னும் 20 நாட்களில் எப்படி பணி முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
“அவசர கதியில் ஏதாவது செய்து, பின்னர் கட்டிடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அது மாணவர்களையே பாதிக்கும். எனவே கட்டிடப் பணியை தரமாக மேற்கொள்வதோடு, மாணவர்களின் இடப்பற்றாக்குறையை போக்க, அங்குள்ள கிராமசேவை மையக் கட்டிடத்தை சிறிது நாட்களுக்கு பயன்படுத்தலாம்” என்கின்றனர் ஆயிக்குப்பம் கிராம மக்கள்.
