Published : 19 Jul 2023 03:25 PM
Last Updated : 19 Jul 2023 03:25 PM
கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள நற்கவந்தன்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோழிப்பள்ளம் கிராமம். இக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி 1926-ம் ஆண்டு, ஆங்கி லேயர் ஆட்சி காலத்திலேயே அந்த காலத்து சமூக ஆர்வலர்களால் திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, பின் தொடக்கப் பள்ளியாக உருவெடுத்தது.
சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்த போது, இப்பள்ளிக் கட்டிடம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. சீரமைக்கப்பட்ட இப்பள்ளியை அப்போதைய அமைச்சர் கக்கன் திறந்து வைத்துள்ளார். இந்தப் பள்ளியில் தற்போது ஆங்கில வழி கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.
நடராஜபுரம், நற்கவந்தன்குடி, கோழிப்பள்ளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்து மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அடிதட்டு மாணவர்கள் கல்வி கற்க இப்பள்ளி ஏதுவாக உள்ளது. தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் இந்த தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளிக் கட்டிடம் வலுவிழந்ததால், கடந்த 2017 - 18-ம் கல்வியாண்டில் இடிக்கப்பட்டது. இதுவரை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் ஒரு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. அதில், தற்போது கடும் இடநெருக்கடியுடன் தலைமையாசிரியர் அறை மற்றும் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு ஆகிய 2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1 முதல் 3-ம் வகுப்புகள் வரை, அதேப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையமோ அதே பகுதியில் உள்ள தனி நபர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்டு வருகிறது. வாடகை எதுவும் வாங்காமல் தனிநபர் அந்தக் கட்டிடத்தை அங்கன் வாடிக்காக கொடுத்துள்ளார். குறிப்பிட்ட இந்தக் கட்டிடமும் வலுவிழந்து உள்ளது. இந்தக் கட்டிடத்தையும் விரைவில் இடிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நெருக்கடியான சூழலால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது 65 மாணவர்களே பயின்று வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இப்பள்ளி குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை. “அரசு அதிகாரிகள் ஓரிரு முறை வந்து பார்த்து விட்டு, போனதோடு சரி. பள்ளி அப்படியே இருக்கிறது.
அங்கன் வாடி கட்டிடம் இடிக்கப்பட்டால் முதல் 3 வகுப்பு மாணவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை” என்று இக்கிராம மக்கள் தெரிவிக் கின்றனர். மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் இப்பள்ளியை பார்வையிட்டு, புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாணவர்கள் கல்வி பயில தற்காலிகமாக ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கோழிப் பள்ளம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT