

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் புகழேந்தி.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பட்டியலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பட்டியலில் இவர் 531 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 8-ம் இடம் பிடித்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புகழேந்தி, 10-ம் வகுப்புவரை ரஞ்சன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார்.
2021-22-ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். அதே ஆண்டு முதல் முறை நீட் தேர்வு எழுதியபோது 266 மதிப்பெண்கள் பெற்றார். அந்த மதிபெண்ணுக்கு கால்நடை மருத்துவம், பல் மருத்துவம் சேர இடம் கிடைத்தது. ஆனால், புகழேந்தி அதில் சேர விரும்பவில்லை. வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கு தயாராகி மறுமுறை தேர்வெழுத முடிவு செய்தார்.
ஆனால், அவரது தாவரவியல் ஆசிரியை அமுதாவின் உதவியால், சேலம் மாவட்டம் விரகனூரில் தனியார் பள்ளியுடன் இணைந்து செயல்படும் நீட் கோச்சிங் மையத்தில் சேர்த்து படித்தார். அங்கு தயாரான புகழேந்தி, 2-வது முறை நீட் தேர்வில் பங்கேற்று 531 மதிப்பெண்கள் பெற்றார்.
இந்நிலையில், நேற்று வெளியான மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் 8-ம் இடம் பிடித்துள்ளார்.
இவரது தந்தை தமிழ்ச்செல்வன் கட்டுமானத் தொழிலாளி. அம்மா சுமதி, ஆடு மேய்த்து வருகிறார்.
மருத்துவக் கல்வியில் சேர இடம் கிடைத்துள்ள நிலையில், மருத்துவம் படித்து ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பேன் என்றார் புகழேந்தி.