Published : 10 Jul 2023 06:39 PM
Last Updated : 10 Jul 2023 06:39 PM

சான்சிபார் - தான்சானியாவில் சர்வதேச வளாகத்தை நிறுவுகிறது சென்னை ஐஐடி

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), சான்சிபார் - தான்சானியாவில் சர்வதேச வளாகத்தைத் தொடங்குகிறது. இதன் மூலம் சர்வதேச வளாகம் ஒன்றைத் தொடங்கும் நாட்டின் முதல் ஐஐடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வளாகம் அமையவிருப்பதையொட்டி இறுதிகட்ட நடைமுறையாக இந்தியா- தான்சானியா இடையே அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்த செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி-ன் சான்சிபார் வளாகம் (https://www.iitm.ac.in/zanzibar/) கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் தீவில் அமைய உள்ளது. இந்தியா, சான்சிபார்-தான்சானியா இடையேயான இந்த கல்விக் கூட்டுமுயற்சி, தனித்துவம் உடையதாகவும், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும்.
இந்த வளாகத்தில் தொடக்க நாட்களில் சென்னை ஐஐடி-ல் இருந்தோ அல்லது இந்தியாவைச் சேர்ந்தவர்களோ ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். உள்ளூரைச் சேர்ந்த திறமையான நபர்களுக்கு பயிற்சி அளித்து நியமிப்பதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடியில் ஜூலை 2023-ல் தொடங்கவுள்ள பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் தான்சானியா/சான்சிபாரைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்திய அரசு ஏராளமான உதவித் தொகைகளை வழங்குகிறது.

இன்று (ஜூலை, 10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்தது. "சான்சிபாரில் வளாகத்தை நிறுவியிருப்பது உண்மையிலேயே சென்னை ஐஐடி-ன் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாகும். இதன்மூலம், சான்சிபாரில் வருங்காலத்தில் உயர்கல்விக்கான முன்முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க முடியும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

முதல் கல்வியாண்டுக்கான வகுப்புகளை (2023-24) அக்டோபர் 2023-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் நான்காண்டு இளங்கலை அறிவியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இரண்டாண்டு முதுகலைத் தொழில்நுட்பம் ஆகிய இரு முழுநேர கல்வித் திட்டங்கள் இடம்பெறுகின்றன. மொத்த மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 70. தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வளாகம் குறித்து விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (குளோபல் எங்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி கூறுகையில், "சென்னை ஐஐடி-யை சர்வதேச மயமாக்கும் முயற்சியில் இது மிக முக்கிய படியாகும். சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அர்த்தமுள்ள மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுப் பட்டப்படிப்புகளை ஏற்படுத்துவது, ஆசிரியர், மாணவர் இயக்கத்தை மேம்படுத்துவது போன்ற விரிவான செயல்திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாட்டில் முழு அளவிலான இயற்பியல் வளாகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம். இந்த லட்சியங்கள் நனவாவதைக் காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

புதிய கல்விக்கொள்கை 2020, இந்திய உயர் கல்வியை நாட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது. தான்சானிய அரசின் கல்வி அமைச்சகம் இது தொடர்பாக தமது விருப்பத்தையும் பேரார்வத்தையும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது. இருதரப்பிலும் பல்வேறு பிரதிநிதிகள் குழுக்கள் பார்வையிட்ட பின், இதில் கூட்டுமுயற்சி சிறந்ததாகக் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை ஐஐடி தனது முதலாவது சர்வதேச வளாகத்தை சான்சிபார் - தான்சானியாவில் தொடங்கத் தயார் நிலையில் உள்ளது.

இந்த சர்வதேச வளாகத்தால் ஏற்படும் தாக்கத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தின் பொறுப்பு இயக்குநர், அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளியின் டீன் பேராசிரியர் ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, "சென்னை ஐஐடி தனது ஆழமான, நீண்ட கால கல்வி மற்றும் ஆராய்ச்சி வலிமையை கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்வதில் பெருமையடைகிறது. பசுமையான இயற்கைச் சூழல்கள், அதிநவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி வசதிகள், புத்தாக்க மையங்கள் என சென்னை ஐஐடி-யை போலவே இந்த வளாகத்திலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கற்பித்தல் நிபுணத்துத்துவம், சென்னை ஐஐடி-யின் தர உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்குமே தவிர, மாணவர்களின் ஆசிரியர்- மாணவர் விகிதம் கணக்கில் கொள்ளப்படாது. பள்ளிகளில் நடத்தப்படும் பட்டப்படிப்பு போன்ற அமைப்புமுறையை சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இரு பட்டங்களையும் தற்போது அமையவிருக்கும் அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி வழங்கும். இந்தியாவிலும், சான்சிபார் - தான்சானியாவிலும் உள்ள நிபுணர்களின் உள்ளீடுகளுடன் கல்வித் திட்டங்களுக்கான விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

நுழைவுக்கான நடைமுறை: மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை சென்னை ஐஐடி-யின் குளோபல் என்கேஜ்மெண்ட் அலுவலகம் ஒருங்கிணைக்கும். சென்னை ஐஐடி-யில் உள்ள ஆசிரிய வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வு, நேர்காணல் என சென்னை ஐஐடி செனட்டால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகள் பின்பற்றப்படும்.

பல்துறைக் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சென்னை ஐஐடி ஆசிரியர்களின் பரந்த நிபுணத்துவத்தை நிலைநாட்டும் விதமாகவும், மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான விரைந்த செயல்திட்டத்தையும் கொண்டதாக இந்த வளாகம் அமைந்திருக்கும். சர்வதேச வளாகங்களில் மிகச் சிறந்த ஒன்றாக சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தை உள்நாட்டு அரசாங்கத்தின் வலுவான ஆதரவுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி, உணவக வசதி போன்றவை அமைக்கப்படும். தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ஈடுசெய்யும் வகையில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நாட்டின் அமைச்சக அதிகாரிகள் மற்றும் தான்சிபார் - தான்சானியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மூலம் அந்நாட்டிற்கான தரவு அறிவியலின் முக்கியத்துவம் தெரிய வந்துள்ளது. சென்னை ஐஐடி-யில் தற்போது உள்ள பிரபலமான பாடத்திட்டங்கள், அவற்றின் எதிர்கால வேலைவாய்ப்பு, உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் ஆகியோரின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டுதான் திட்டமிடப்பட்டுள்ளன.

அலுவலகங்களை அமைப்பதற்கான வசதிகள், வகுப்பறைகள், கலையரங்கம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி ஆகியவற்றுடன் தற்காலிக வளாகம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சான்சிபாரில் உள்ள பிவேலியோ மாவட்டத்தில் உள்ள இந்த வளாகத்தில் உணவக வசதிகள், மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிபுணர்கள் உருவாக்கியுள்ள திட்டவரைபடத்தின்படி, சான்சிபார் தீவில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சென்னை ஐஐடி சான்சிபார் நிரந்தரமாக அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x