Published : 09 Jul 2023 07:15 AM
Last Updated : 09 Jul 2023 07:15 AM

மாணவர்களின் உடல்நலன் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டுமென ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தேசிய சுகாதார இயக்குநரகத்துடன் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை இளம் வயதிலேயே கண்டறியவும் மற்றும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் உட்பட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவாகியுள்ளது.

இதற்காக மாணவர்களின் உடல்நலன் குறித்த விவரங்களைபதிவுசெய்ய ‘டிஎன் ஸ்கூல்’ செயலில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயலியில் பள்ளி மாணவர்கள் உடல் நலன் சார்ந்த முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் உடல் நலக் குறைபாடுகளை அடையாளம் காணமுடியும். மேலும், பிறவிக் குறைபாடுகள், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் போன்ற சிக்கல்களுக்கு விரைந்து உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உதவியாக இருக்கும்.

அந்தவகையில் பல் சொத்தை, தலை சிறியதாகவோ, பெரியதாகவோ உள்ளதா, தோலில் ஏதேனும் புண் அல்லது கொப்புளங்கள் உள்ளனவா, மது அருந்துதல், புகைப்பழக்கம் உள்ளதா, ஆன்லைன் விளையாட்டு பழக்கம் உள்ளதா என்பது போன்ற 35 வகையான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய தகவல்களை வகுப்பாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன், மாணவர்களின் மனநலம் சார்ந்த ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x