

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2023 பருவத்துக்கான இறுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.
பதிவாளர் எஸ்.பாலசுப்ரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 2023 பருவத்துக்கான இறுதித் தேர்வின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆக.5 முதல் அக்.8-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் அரசு விடுமுறை தவிர்த்து, அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
தேர்வுக்கான கால அட்டவணை www.tnou.ac.in என்றபல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, ஒரு வாரத்துக்கு முன்பு இதேஇணையதளத்தில் வெளியிடப்படும். அதேபோல் செய்முறைத் தேர்வுக்கென தனியாக நுழைவுச்சீட்டும் இந்த இணையதளத்தின் வாயிலாகவே வழங்கப்படும்.
இறுதித் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் ஏதேனும் அரசு தேர்வுகள் வரும்பட்சத்தில், அவற்றை எழுத விரும்பும் மாணவர்கள் அரசு தேர்வுகள் அறிவித்தவுடன் வேண்டுதல் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றுடன் வழங்க வேண்டும். இதனை பல்கலைக்கழகம் பரிசீலித்து, அவர்களுக்கு மட்டும் அலுவலக வேலைநாட்களில் பல்கலைக்கழக வளாகத்தில் தனி தேர்வுகள் நடத்த பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.