

சிவகங்கை: ஆதி திராவிடர் நலத் துறையின் குளறுபடியான விதிமுறையால் சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அலைந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் 4 மாணவிகள் விடுதிகள் உட்பட 7 கல்லூரி விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் சேர பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அவர்களில் ஏற்கெனவே பள்ளி விடுதிகளில் தங்கி பயின்றவர்கள், அங்கிருந்து விடுவிப்பு சான்று பெற்றால் மட்டுமே கல்லூரி விடுதிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் விடுவிப்பு சான்றுக்கு சென்னை ஆதி திராவிடர் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் விடுவிப்பு சான்று கேட்டவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட காளையார்கோவில் அருகேயுள்ள கே.பறக்குளத்தைச் சேர்ந்த மாணவர் ராமு கூறுகையில் நான் சிலுக்கப்பட்டி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்தேன். தற்போது சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் பள்ளி விடுதியில் இருந்து விடுவிப்பு சான்று கிடைக்காததால், கல்லூரி விடுதிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் அலுவலகங்களுக்கு அலைந்து வருகிறேன் என்று கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் கூறுகையில், தமிழகம் முழுவதும் விடுவிப்பு சான்று கிடைக்காமல் ஏராளமான மாணவர்கள் அலைந்து வருகின்றனர். இதனால் விடுவிப்பு சான்று வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தில் கேட்டபோது, சென்னை தலைமை அலுவலகத்தில் பேசி விடுவிப்பு சான்று உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.