

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே திருக்கட்டளையில் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கட்டளையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 177 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் மீதும், பள்ளிக்குள்ளும் இளைஞர்கள் சிலர் பள்ளி செயல்படாத நேரங்களில் அமர்ந்து, மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போட்டுச் செல்வதாகவும், சில நேரங்களில் பள்ளியிலேயே படுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், பள்ளி சுற்றுச்சுவர், கதவு, தளவாடப் பொருட்களை அவ்வப்போது உடைத்து சேதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை உயர் அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால், நுழைவாயில் கதவு பெயர்ந்து விழுந்து விட்டது. இதையடுத்து, சுற்றுச்சுவரை உடைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர் நேற்று பள்ளி அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கணேஷ் நகர் போலீஸார், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.