திருச்சுழி அரசு பள்ளியில் போதிய இட வசதியில்லை: சாலையோரத்தில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
விருதுநகர்: திருச்சுழியில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சாலையோரத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த சிறப்புக்குரிய ஊர். அதோடு, அவர் படித்த பெருமைக் குரியது சேதுபதி அரசு மேல் நிலைப் பள்ளி. இங்கு திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் 600 முதல் 700 பேர் வரை படித்து வந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
450 மாணவ, மாணவிகள் மட்டுமே வகுப்பறைகளில் அமர்ந்து படிக்கும் இடவசதியுள்ள இப்பள்ளியில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கு வெளியே உள்ள சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். வகுப்பறையிலும் போதிய இட வசதியில்லாமல் நெருக் கடியான சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
காலையில் நடைபெறும் பிரார்த்தனைகூட பள்ளிக்கு வெளியே சாலையில்தான் நடைபெறுகிறது. அதோடு, விளையாட்டு மைதானம், ஆய்வகம் போன்ற வசதிகளும் இல்லை. பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், கூடுதல் வகுப் பறை கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் கூறுகையில், பள்ளிக்கு அருகே அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதோடு, பள்ளியில் போதிய இட வசதி இல்லை என்றும், கூடுதல் வகுப்பறை வேண்டும் என்றும் இப்பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் சிரமத்தைப் போக்க விரைவில் தீர்வு காணப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
