

உதகை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தோடர் பழங்குடியின மாணவி நீத்து சின்னுக்கு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கார்டன் மந்த் பகுதியிலுள்ள தோடர் பழங்குடியின தம்பதி நார்ஷ்தோர் குட்டன், நித்யா ஆகியோரின் மகளான நீத்து சின், முதன் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் தோடரின மாணவி, மருத்துவம் படிக்க போகும் முதல் மாணவி என்ற பெருமைக்குரியவர் என, மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோரை சந்தித்து நீத்து சின் வாழ்த்து பெற்றார். அவரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். மாணவி நீத்து சின்னுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால், அவரின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக, நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
மாணவியின் தாய் நித்யா, தோடரின தலைவர் மந்தேஷ்குட்டன், ஆதிவாசிகள் நலச் சங்க செயலாளர் ஆல்வாஸ் மற்றும் தோடரின மக்கள் உடனிருந்தனர்.