Published : 28 Jun 2023 04:41 PM
Last Updated : 28 Jun 2023 04:41 PM

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் வகுப்பறைகள் இருந்தும் மரத்தடியில் பயிலும் மாணவர்கள்

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகங்களுக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகள் பயன்படுத்தப்படுவதால் மாணவர்கள் மரத்தடியிலும், பள்ளி வராண்டா பகுதிகளிலும் அமர்ந்து பயிலும் நிலை நீடிப்பதால், மாணவர்களின் கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்படுவதாக அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து 'இந்து தமிழ் திசை' உங்கள் குரல் பகுதியில் புகார் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: 5.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50 வகுப்பறைகள் உள்ளன. 6 முதல் பிளஸ் 2 வரை (பிளஸ் 1 நீங்கலாக) சுமார் 2,000 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 16 வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை ஆட்சியர் அலுவலக பயன்பாட்டுக்காக மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்டது.

அங்கு கருவூலம், வேளாண், மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. எஞ்சிய 34 வகுப்பறைகளில் 25 வகுப்பறைகள் மாணவர்களுக்காகவும், 9 வகுப்பறைகள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டிய நோட்டுப் புத்தகங்கள், இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்க பயன்படுத்தப்படுகின்றன. இதனால் 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்கள் மரத்தடியிலும், பள்ளி விழா மேடைகளிலும் அமர்ந்து படிப்பதால் மாணவர்களின் கல்வி கற்கும் சூழல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், கரும்பலகை, மின்விசிறி இன்றி மாணவர்களை மரத்தடியிலும், வராண்டாவிலும் உட்கார வைத்து பாடம் நடத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. கடும் வெயில் மற்றும் மழையில் மாணவர்கள் படும்பாடு திண்டாட்டமாக உள்ளது. ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே இயங்கி வந்த கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பழையக் கட்டிடம் காலியாக உள்ளது.

எனவே பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களை பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் பெயரச் செய்தால், மாணவர்கள் அமர்ந்து பயில போதிய வகுப்பறைகள் கிட்டும். இதை ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக பேச மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் பேச முன்வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x