Published : 28 Jun 2023 02:14 PM
Last Updated : 28 Jun 2023 02:14 PM

பர்கூர் பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: பள்ளியை புதிய கட்டிடத்துக்கு மாற்றவும் ஆட்சியர் உறுதி

ஈரோடு: பர்கூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும், பள்ளி வகுப்பறைகளை புதிய கட்டிடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டும், வகுப்பறைகள் அங்கு செயல்படாமல் இருப்பது குறித்தும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூரில் செயல்படும் மேல்நிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தற்போது 315 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை 210 மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில், இவ்வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். காலியாக உள்ள கணித பாடத்தினை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) கொண்டும், சமூக அறிவியல் பாடத்தினை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் வரலாறு (மாற்றுப்பணி) கொண்டும் மாணவர் நலன் கருதி கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில், இரண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தில் தலைமையாசிரியர் அறை, 6 வகுப்பறைகள், மேல்நிலை வகுப்புகளுக்கான 2 ஆய்வகங்கள் உயர்நிலை வகுப்புகளுக்கான 1 ஆய்வகம் மற்றும் அறிவுத்திறன் வகுப்பறைகள் ஆகியவை உள்ளன.

இவ்வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் விரைவில் பள்ளி இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பள்ளி மாணவர்களின் நலன்கருதி, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x