Published : 28 Jun 2023 04:22 PM
Last Updated : 28 Jun 2023 04:22 PM

ஒற்றை மாணவியுடன் இயங்கி வந்த அரசு ஆரம்பப் பள்ளி மூடல்: உதகை கிராம மக்கள் சோகம்

உதகை அருகே பார்சன்ஸ்வேலியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி.

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பார்சன்ஸ்வேலி. தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்த இந்த பகுதியில், நீர்மின் உற்பத்திக்காக 1961 முதல் 1966 வரை அணை கட்டும் பணிகள் நடைபெற்றன. அப்போது பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து குடியமர்த்தி, அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வகையில், இந்த பகுதியில் 1962-ம் ஆண்டு முதன் முதலாக அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. 1962-ம் ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். 7 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர்.

காலப்போக்கில் அங்கு மின்வாரியத்தில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்றோ அல்லது பணியிட மாறுதல் பெற்றோ சென்றதால், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. மக்களின் இடப்பெயர்வு காரணமாக, பார்சன்ஸ்வேலி பகுதியில் படிப்படியாக மக்கள்தொகை குறைந்தது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக 10-க்கும் குறைவான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

அங்கு, தற்போது 30-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை 10 என்ற அளவிலேயே இருந்து வந்தது. தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் ஆசிரியர் மட்டும் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் படித்து வந்த 4 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, உயர் கல்விக்கு சென்றுவிட்டனர். 2022-23-ம் கல்வியாண்டில் மாணவி ஒருவர் மட்டும் 1-ம் வகுப்பில் சேர்ந்தார். தலைமை ஆசிரியர் மட்டும் அந்த மாணவிக்கு பாடம் நடத்தி வந்திருக்கிறார்.

உதகை அருகே பார்சன்ஸ்வேலியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவி
பயின்று வந்ததற்கான வருகைப்பதிவேடு.

தற்போது, அந்த ஒரு மாணவியும் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்று, வேறொரு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறார். மாணவர்கள் யாரும் இல்லாததால், பார்சன்ஸ்வேலியில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியை அதிகாரிகள் ஆய்வு செய்து மூடினர்.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "ஒன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, கடந்த ஓராண்டாக தலைமை ஆசிரியர் பாடங்களை நடத்தி வந்தார். சக மாணவ, மாணவிகள் இல்லாமல் ஒரு மாணவி மட்டும் பயின்று வந்தது, அவரின் பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சக குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து கல்வி கற்கும் வகையில், மற்றொரு அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டனர். வேறு வழியின்றி பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தற்காலிகம் தான்.

மாணவர் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் பள்ளி திறக்கப்படும். இதேபோல, உதகை அருகே கடநாடு பகுதியிலுள்ள பள்ளியிலும் மாணவர் சேர்க்கை இல்லாததால் மூட வேண்டியிருக்கிறது" என்றனர்.

மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறும்போது, "பார்சன்ஸ்வேலி பள்ளியில் இந்த ஆண்டு இதுவரை மாணவர்கள் யாரும் வரவில்லை. ஆனாலும் அந்த பகுதியிலுள்ள வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக கணக்கெடுப்பு நடத்தி, மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளதா? என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு இருந்தால் வரும் நாட்களில் மாணவர் சேர்க்கை நடக்கும், இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்கும்பட்சத்தில் மீண்டும் பள்ளி திறக்கப்படும்" என்றார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு கல்வி வழங்கி வாழ்வில் ஒளியேற்றி வைத்த அரசு தொடக்கப்பள்ளி மூடப்பட்ட நிகழ்வு உள்ளூர் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x