Last Updated : 26 Jun, 2023 07:05 PM

 

Published : 26 Jun 2023 07:05 PM
Last Updated : 26 Jun 2023 07:05 PM

இடைநிலை ஆசிரியர் பணி நியமன விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார்‌ பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கோவை: இடைநிலை ஆசிரியர் பணி நியமன விவகாரம் குறித்து விரைவில் நிதித் துறை வாயிலாக கூட்டம் நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை, ஈரோடு, நாமக்கல்‌, நீலகிரி மற்றும்‌ திருப்பூர்‌ ஆகிய மாவட்டங்களைச்‌ சார்ந்த 350 தனியார்‌ பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, "தமிழ்நாட்டில்‌ தனியார்‌ பள்ளிகள்‌ மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளியின்‌ அங்கீகாரத்தினைப்‌ புதுப்பித்து ஆணை பெற்று செயல்பட்டு வருகின்றன.

மாநிலப்‌ பாடத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ தனியார்‌ பள்ளிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மண்டல வாரியாக அங்கீகாரச்‌ சான்றுகளைப்‌ புதுப்பித்து ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக திருச்சியை சுற்றியுள்ள 10 மாவட்டங்களைச்‌ சார்ந்த தனியார்‌ பள்ளிகளுக்கு அங்கீகாரச்‌ சான்றுகள்‌ திருச்சியில்‌ வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது 350 தனியார்‌ பள்ளிகளுக்கு அங்கீகாரச்‌ சான்றுகள்‌ வழங்கப்படுள்ளது. குழந்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாக வாசிக்கவேண்டும் என்று Read Marathon செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் நம்முடைய தாய்மொழியான தமிழ்மொழியை கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்களை நியமித்து கற்றுத்தர வேண்டும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ''சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட எந்த பள்ளியாக இருந்தாலும் சரி, தமிழ் கட்டாயம் கற்பிக்கப்படுறதா என்பதை உறுதி செய்து வருகிறோம். மாணவர்களின் விவரங்கள் கசிவதாக துறை கூட்டத்தில் கேட்போது, 2018-ல் அளிக்கப்பட்ட விவரங்கள் வெளியானதாகவும், தற்போது ஏதும் கசியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இனிமேல் அதுபோன்று நடக்காத வகையில் பார்த்துக்கொள்வது எங்களது கடமை'' என்றார்.

கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தரமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்காக காத்துக் கொண்டுள்ளனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றுதான் அரசு நினைக்கிறது. ஏறத்தாழ டெட் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஏதாவது ஒருவகையில் அவர்களை தேர்வு செய்துகொண்டேதான் இருக்க வேண்டும்.

இல்லையெனில், ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்துதை நிறுத்திவிட வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக வாக்குறுதியையும் வழங்கி உள்ளோம். சட்டத் துறை, மனித வளத்துறை ஆகியவற்றுடன் நிதித்துறை செயலர் வாயிலாக மிக விரைவில் இதுதொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு காண வேண்டும். நிதி எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்.பி. கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ எஸ்.நாகராஜ முருகன்‌ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x