ஆம்பூர் - பெரியவரிக்கம் பள்ளியில் இட நெருக்கடி: அம்மன் கோயில் வாசலில் கல்வி பயிலும் மாணவர்கள்

ஆம்பூர் - பெரியவரிக்கம் பள்ளியில் இட நெருக்கடி: அம்மன் கோயில் வாசலில் கல்வி பயிலும் மாணவர்கள்
Updated on
2 min read

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் நடுநிலைப் பள்ளியில் போதுமான இட வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள அம்மன் கோயிலில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியவரிக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நடுநிலைப் பள்ளிக்கு போது மான கட்டிட வசதி இல்லை என்பதால், கடந்த 2 ஆண்டுகளாக 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை அருகில் உள்ள கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் அமரவைத்து வகுப்பு கள் நடத்தப்படுகின்றன.

இக்கோயிலில், போதுமான காற்றோட்ட வசதியும், வெளிச்சமும் இல்லாததால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர். அதேபோல், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நடுநிலைப்பள்ளி வளாகத்தின் உள்ளேயே ஒரு ஷாமினா பந்தல் போடப்பட்டுள்ளது. இங்கு ஒரு வகுப்பும் செயல்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதாக கூறி, சிதிலமடைந்த ஒரு வகுப்பறை கட்டிடத்தை இடித்துள்ளனர். அந்த பணியும் தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அருகே மகளிருக்கான புது வாழ்வு மைய கட்டிடம் ஒன்றும் உள்ளது. இங்கு பெண்கள் சுய முன்னேற்ற வளர்ச்சி மற்றும் பயிற்சிக்காக வாங்கப்பட்ட தளவாட சாமான்களை போட்டு வைத்துள்ளனர்.

சுமார் 8 அடி அகலமும், 15 அடி நீளமும் உள்ள இந்த புதுவாழ்வு மைய கட்டிடத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட 2 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள தளவாட பொருட்களோடு பொருட்களாக குழந்தைகளையும் சேர்த்து அடைத்து வைத்துள்ளனர் என பெற்றோர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

மேலும், இந்த புதுவாழ்வு மைய கட்டிடத்தில் போதுமான காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லை. கால்நடைகளை போல சின்னஞ்சிறு குழந்தைகளை குறுகிய இடவசதி இல்லாத கட்டிடத்தில் வைத்து தான் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

பெரியவரிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நிலை குறித்தும், அங்கன்வாடி மையங்களின் நிலை குறித்தும் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, "இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு புகாரும் எங்களுக்கு வரவில்லை. இருப்பினும், ஆய்வு நடத்தி வகுப்பறைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in