

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றிருந்த திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 1998-99-ம் ஆண்டில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிடமிருந்து (யுஜிசி) தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. இதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இந்தநிலையில், 2021 மே மாதத்துடன் இக்கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் முடிவடையும் நிலையில், அதற்கு 6 மாதங்களுக்கு முன்பே புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், கல்லூரி நிர்வாகம் விண்ணப்பிக்க தவறியதால், தன்னாட்சி அங்கீகாரம் காலாவதியானது அண்மையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் கல்வித் துறை மூலம் மீண்டும் தன்னாட்சி அங்கீகாரத்தை வழங்கக் கோரி யுஜிசிக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தமிழக உயர் கல்வித் துறையின் உத்தரவின் பேரில், கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கம் கேட்டு, 2021-ம் ஆண்டில் கல்லூரியில் பணியாற்றிய தேர்வு நெறியாளர், உதவி நெறியாளர் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேருக்கு
கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கான விளக்கத்தை 3 நாட்களில் அளிக்க வேண்டும் எனவும், மேலும், தினந்தோறும் மாலை 4 மணி வரை (2 மணி நேரம் கூடுதல் பணி) கல்லூரியில் இருந்து ‘நாக்’ அங்கீகாரம், தன்னாட்சி அங்கீகாரம் ஆகியவற்றுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட 21 பேரும் முதல்வரிடம் தங்களது விளக்கத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை கல்லூரி கல்வி இயக்குநரகம் மேற்கொள்ளும் எனவும் தெரிகிறது.