

சென்னை: அரசு ஆரம்பப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் சேர்த்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதை, படிப்பதை உறுதி செய்யும் விதமாக எண்ணும், எழுத்தும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அதன்படி முதல்கட்டமாக 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு எண்ணும், எழுத்தும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
இதற்குப் பரவலாக வரவேற்பு கிடைத்ததை அடுத்து நடப்பு கல்வியாண்டில் (2023 - 24) 4, 5-ம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி நூல்கள், சிறப்புக் கையேடுகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கான வகுப்புகளைச் சேர்த்து நடத்தக் கூடாது என ஆசிரியர்களுக்குத் தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்: தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1, 2, 3-ம் வகுப்புகளுடன் 4, 5-ம் வகுப்பு மாணவர்களைச் சேர்த்து பாடம் நடத்தக் கூடாது.
தனி வகுப்புகளாக பிரித்து பாடம்: அதாவது ஈராசிரியர் பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ம் வகுப்புக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும். அதேபோல், 3 அல்லது 4 ஆசிரியர் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளைப் பிரித்து பாடங்களை நடத்த வேண்டும்.
மேலும், போதிய ஆசிரியர்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாகப் பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.