

உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை சிலர் மது குடிக்கும் இடமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வாசகர் ஜெகதீஸ் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் பதிவில் கூறியிருப்பதாவது: உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்குள்ள ஒன்றிய அலுவலகத்தின் எதிரே தனியாரால் அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை பள்ளியின் மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மைதானத்தில் போதிய கண்காணிப்பு இல்லை. இரவுக் காவலர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால் இரவு நேரங்களில் மதுப் பிரியர்கள் சுற்றுச் சுவரை தாண்டி குதித்து, மைதானத்துக்குள் சென்று மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். காலி மதுபாட்டில்களை மைதானத்துக்குள் வீசியும், உடைத்தும் அட்டகாசம் செய்கின்றனர்.
தட்டி கேட்கும் சமூக ஆர்வலர்களை தாக்க முற்படுகின்றனர். இதனால் மைதானத்தில் முறையாக விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகம் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமங்கலம் போலீஸார் இரவு நேரத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டு பள்ளி மைதானத்துக்குள் புகும் மர்ம நபர்களை பிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.