கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் பள்ளியின் குடிநீர் தொட்டியை சரி செய்வார்களா?

கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் பள்ளியின் குடிநீர் தொட்டி.
கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் பள்ளியின் குடிநீர் தொட்டி.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் உடல்நலம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அப்பள்ளியைச் சேர்ந்த சிலர் நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ வாயிலாக அதுபற்றிய குறைகளை பதிவு செய்தனர்.

உங்கள் குரலில் பதிவிடப்பட்ட இந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் காவல் நிலைய பின்புறத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குடிநீர் தேவைக்காக கடந்த 2011-12 நிதியாண்டில் சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் வடக்கனந்தல் பேரூராட்சி மூலம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொட்டி அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தொட்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் குப்பைகள் மண்டி கிடக்கின்றன. எலி உள்ளிட்டவை இறந்து கிடக்கின்றன.

குறிப்பிட்ட அந்தத் தொட்டியில் இருந்து தண்ணீர் குடிப்பதை மாணவிகள் நிறுத்தி விட்டனர். பள்ளி வளாகத்துக்கு வெளியே உள்ள பொதுக் குடிநீர் குழாயில் வரும் தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் பள்ளியில் முறையிட்ட போது, பேரூராட்சி நிர்வாகத்திடம் இதுபற்றி பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை என்று கூறியதாக நம்மிடம் தெரிவித்தனர்.

பள்ளித் திறப்பதற்கு முன், பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டு அனுப்பி வைக்குமாறும், அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருந்தும், பள்ளி நிர்வாகம் அதன் பணிகளை செய்யவில்லை என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயவேலுவிடம் கேட்டபோது, “மின் மோட்டார் பழுதானதால், குடிநீர் தொட்டி பயன்பாடில்லாமல் போய்விட்டது. மோட்டாரை பழுது நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். தலைமையாசிரியர் முதலிலேயே இது குறித்து தெரிவித்திருந்தால் முன்கூட்டியே சரி செய்திருப்போம். இருப்பினும் கூடுதல் குடிநீர் தொட்டிகள் உள்ளதால், மாணவியருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏதுமில்லை” என்றார்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ராணியிடம் கேட்டபோது,“பள்ளியில் 3 குடிநீர் தொட்டிகள் உள்ளன. தற்போது பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டியை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சரி செய்து வருகின்றனர். அந்த ஒரு தொட்டியால் பாதிப்பு ஏதுமில்லை” என்று தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர் இவ்வாறு குறிப்பிட்டாலும், இப்பள்ளியில் 1,400 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு நான்கைந்து பிரிவுகளாக குடிநீர் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொட்டி பழுதானதால் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு இடைவேளையின் போது பள்ளியை விட்டு வெளியே வந்து, பொது குழாயில் குடிநீர் அருந்துகின்றனர். எனவே இதை உடனே சரி செய்வது அவசியமாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in