தமிழ்வழி பொறியியல் பாட பிரிவுகளை அதிகரிக்க திட்டம் - அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழ்வழி பொறியியல் பாட பிரிவுகளை அதிகரிக்க திட்டம் - அமைச்சர் பொன்முடி தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழ் வழியிலான பொறியியல் பாடப் பிரிவுகள் மற்றும் சேர்க்கை இடங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அண்ணா பல்கலை. துறைத் தலைவர்கள் மற்றும் ஆய்வு மைய இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம், கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜி.ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘வேலை வாய்ப்புக்கு ஏற்றவாறு பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். தமிழ்வழி பாடப் பிரிவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ் பாடங்களை கற்பிக்க கூடுதலான ஆசிரியர்களை நியமிப்பதுடன், தமிழுக்கு தனித் துறை இருக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அண்ணா பல்கலை.யில் சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தமிழ் வழியில் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கு தலா 30 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே, சேர்க்கை இடங்களை 60-ஆக உயர்த்த திட்டமிட்டு வருகிறோம்.

வரும் கல்வியாண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் கற்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆங்கிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலை.யின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் தமிழ்வழி பாடப் புத்தகங்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in