இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்த்து, அவர்கள் கல்வி கற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்த ஆண்டு செல்போன் செயலி, இணைய பயன்பாடு உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணங்களின் அடிப்படையில், பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள், மீண்டும் சேர்க்கத் தேவையில்லாத மாணவர்கள், விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டியவர்கள் என 3 பிரிவுகளாகப் பிரித்து, செயலியில் ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும்.

அதேபோல, ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள், முதல் 4 வாரத்துக்குப் பின்னும் வராதவர்களைப் பிரித்து, அவர்களின் விவரப் பட்டியலை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பாக, இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, அவர்களை வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கவேண்டும்.

இதுதவிர, 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் கல்வியைத் தொடர வழிசெய்ய வேண்டும்.

இதற்கு பிறதுறைகளின் ஒத்துழைப்பும் அவசியமானது என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில், பள்ளி, வட்டாரம், மாவட்டம் அளவில் குழுக்கள் அமைத்து, இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளவர்களில் இடைநின்ற மாணவர்களை தீவிரமாகக் கண்காணிப்பதுடன், இந்தப் பணிகளை கவனமாகக் கையாள்வதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in