

சென்னை: கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்று முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்தார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தமிழக மாணவர் ஜெ.பிரபஞ்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவர் ஜெ.பிரபஞ்சன் கூறியது: முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேசிய அளவில் நான் முதலிடம் பிடித்துள்ளதால் எனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீட் தேர்வு மிகச்சிறந்த தேர்வு ஆகும். தகுதியானவர்களை மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்ய நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். நீட் தேர்வு கடினம் என்ற மனநிலையில் இருந்து முதலில் வெளியே வரவேண்டும். அப்போது தான் நன்றாக படிக்க முடியும். கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்.
நான் 10-ம் வகுப்பு வரை செஞ்சியில் மாநிலப் பாடத்திட்டத்தில் தனியார் பள்ளியில் படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்க சென்னையில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்கு வந்தேன். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அங்கேயே நீட் பயிற்சியும் பெற்றேன். எனதுகடும் உழைப்பால் முழு மதிப்பெண்எடுக்க முடிந்தது. திட்டமிட்டு படித்ததால் 100 சதவீத மதிப்பெண் கிடைத்தது.
தொடர் பயிற்சி எனக்கு வெற்றியை சாத்தியமாக்கியது. என்னுடன் படித்த பலர் 700 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 11-வது படிக்கும் போது விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது முழுவதும் செல்போன் உபயோகப்படுத்தவில்லை. பிளஸ் 2 வகுப்பில் செல்போன் பயன்படுத்தினேன்.
நான் எப்போதும் படிப்பு என்று இருக்கவில்லை. படிக்கவும், விளையாடவும், தனித்தனியாக நேரத்தை ஒதுக்கினேன். எனக்குபிடித்த சில பாடல்கள் கேட்பேன்.செல்போனில் கேம் விளையாடுவேன். பொன்னியின் செல்வன் உள்ளிட்ட நாவல்களை படித்திருக்கிறேன்.
எனக்கு சிறு வயது முதலேமருத்துவராகும் கனவு இல்லை. எனக்கு உயிரியல் பாடம் பிடித்ததால் மருத்துவராக நினைத்தேன். டெல்லி எய்ம்ஸ் அல்லது புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளேன். அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது எனது இலக்காக வைத்திருக்கிறேன். அதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் கே.செந்தில்: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுபவர்கள், தேர்ச்சி பெறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும்அதிகரித்து வருகிறது. இதனை பார்க்கும் போது, நீட் தேர்வை தமிழக மாணவர்கள் ஏற்றுக் கொண்டு வருவதை காட்டுகிறது.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.அகிலன்: தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.