சிவகங்கை | நீட் தேர்வில் 100+ அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி - 17 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு

நீட் தேர்வில் 538 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவி அன்னபூரணி.
நீட் தேர்வில் 538 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவி அன்னபூரணி.
Updated on
1 min read

சிவகங்கை: நீட் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், இவர்களில் 17 பேருக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நீட் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அன்னபூரணி 538 மதிப்பெண்கள், சண்முகநாதபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பாண்டிராஜன் 479, மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பவதாரணி 441, அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜெயஈஸ்வரன் 421, தாணு 322, திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா 417, பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளி தேவதர்சினி 352, அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மீனாட்சி 350...

அபிராமி 339, கார்த்திக் 315, அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விக்னேஷ் 334, மாணவி ஐஸ்வர்யா 304, முறையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மதன் 326, சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஸ்வநாதன் 318, இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்திரி 313, சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சூர்யா 259, மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சந்தியா 255 மதிப்பெண்கள் பெற்றனர்.

இவர்கள் 17 பேருக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்ச்சி அடைந்த மாணவர்கள், நீட் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் பாராட்டினார். மேலும் 538 மதிப்பெண்கள் பெற்றுள்ள உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அன்னபூர்ணியின் தந்தை முருகன் கூலித் தொழிலாளியாகவும், தாயார் சித்ரா இல்லதரசியாக உள்ளனர்.

இதுகுறித்து அன்னபூர்ணி கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிடலாம். எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி சிவகங்கை, காரைக்குடி ஆகிய 2 இடங்களில் நீட் பயிற்சி மையங்களை தொடங்கினார். கடந்த ஆண்டு 5 பேருக்கு மருத்துவத்தில் இடம் கிடைத்தது. இந்தாண்டு 300-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நீட் தேர்வில் 100-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்தனர். மேலும் 17 பேருக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in