Published : 13 Jun 2023 04:07 AM
Last Updated : 13 Jun 2023 04:07 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடக்குமா அல்லது தேசிய மருத்துவ ஆணையம் மூலம் நடக்குமா என்பதில் குழப்பம் உள்ளது. இவ்விஷயத்தில் புதுச்சேரி அரசு மவுனமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் தவிப்பில் உள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணையம் 13-3-2023 அன்று அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், 2023-24 கல்வியாண்டு முதல் மத்திய மாநில அரசு கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் தேசிய மருத்துவ ஆணையம் (MCC) மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு ஜிப்மர் மருத்துவ கல்லூரி யின் இட ஒதுக்கீட்டில் கிடைத்து வந்த 64 மருத்துவ இடங்கள் கிடைக்குமா? புதுச்சேரி மாநில அரசின் (MBC,EBC,BCM,BT) சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கிடைக்குமா என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் புதுச்சேரி மாநில மாணவர்கள் பெற்றோர் உள்ள னர்.
இது தொடர்பாக புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலருக்கு மனு அளித்துள்ளார்.
அது பற்றி அவர் கூறியதாவது: இதுவரை தேசிய மருத்துவ ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக் கழக மருத்துவ கல்லூரிகளின் 100 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களையும், மாநில அரசு மருத்துவ கல்லூரிகளின் 15-சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமே கலந்தாய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்தப்படும் என்பதால் மாநில மாணவர்களின் உரிமை பாதிக்கப்படும் நிலை உள்ளது.
உதாரணத்துக்கு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் மூலம் கலந்தாய்வு நடத்தியதால் புதுச்சேரிக்கு நோடல் அதிகாரி இருந்தும், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து வருவதை தடுக்க முடிய வில்லை. இதனை தடுக்க பல கட்ட போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது. அதேபோல் மாநில கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பறிபோகும் அச்சம் உள்ளது.
புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை சென்டாக் மூலம் நடத்தப்படுமா? தேசிய மருத்துவ ஆணையம் மூலம் நடத்தப்படுமா? என்ற உண்மைத் தன்மையை புதுச்சேரி அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்டாக் உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சுகாதாரத்துறை பரிந்துரையின் அடிப்படையில்தான் இவ்விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்" என்றனர். அதே நேரத்தில் சுகாதாரத் துறை தரப்போ, முதல்வர் தான் இவ்விஷயத்தில் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் அரசு தரப்பு இவ்விஷயத்தில் மவுனம் காக்கும் சூழலே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT