

தாம்பரம்: சென்னையை அடுத்த கவுரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு இலவச ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ -மாணவிகளுக்கு மேல் படிப்புக்கான ஆலோசனைகளை வழங்கினார். நியூ பிரின்ஸ் கல்வி குழுத்தின் துணைத் தலைவர்கள் எல். நவீன்பிரசாத் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி. சரவணன், இயக்குநர் பேராசிரியர் எ.சுவாமி நாதன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசும்போது, "மாணவர்கள் தொழில்நுட்ப உலகில் நாளைய தேவை என்ன என்பதை நம்பி உணர்ந்து இப்போதே அதற்கான துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் கற்று அதற்கு ஏற்றார்போல் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் துறைக்குத் தேவையான புதிய தொழில் நுட்பங்களைக் கணினி அறிவியல் உடன் இணைத்துக் கற்க வேண்டும். அப்போது தான் அந்தத் துறையில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தான் எல்லா துறைகளையும் ஆளப்போகிறது. எனவே மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துறையுடன் தொடர்புடைய சாட் ஜி.பி.டி, ஜி.பி.யூ மற்றும் மோஜோ நிரலாக்க மொழி ஆகியவற்றை கற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.