

மதுரை: பள்ளிகளில் அடிப்படை சட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.தாரணி தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.தாரணி நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
இதில் காணொலி வழியாக தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுரேஷ்குமார், வேல்முருகன் உள்ளிட்டோரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார், சிறப்பு அரசு வழக்கறிஞர் அன்புநிதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் நீதிபதி டி.தாரணி பேசியதாவது: இந்திய தண்டனை சட்டம், சாட்சிய சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், சாலை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அடிப்படை சட்டங்கள் குறித்த பாடங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். சட்ட நடைமுறைகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நீதித்துறையில் 32 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.