

சென்னை: "பொறியியல் படிப்புகளில் சேர இந்த ஆண்டு 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 ஆயிரத்து 610 விண்ணப்பங்கள் அதிகரித்திருக்கின்றன" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி 4.6.2023 அன்று முடிவடைந்தது. இந்த ஆண்டு 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 ஆயிரத்து 610 விண்ணப்பங்கள் அதிகரித்திருக்கின்றன.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக, பொறியியல் கல்லூரிகள் தொழிற்சாலைகளுடன் தொடர்பு கொண்டு, கல்வி முறைகளை எல்லாம் மாற்றியிருக்கிறோம். இந்த நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான், இன்று பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் விண்ணப்பங்களும் அதிகரித்திருக்கிறது.
தமிழக முதல்வர் அறிவித்த, அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, சென்ற ஆண்டைவிட, இந்தாண்டு 7,852 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் 217 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 394 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு 3081 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த ஆண்டு 5,024 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் கடந்த ஆண்டு 1084 மட்டுமே வந்திருந்தது. இந்த ஆண்டு 1,615 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன" என்று அவர் கூறினார்.