Published : 07 Jun 2023 07:11 PM
Last Updated : 07 Jun 2023 07:11 PM
சென்னை: சென்னை ஐஐடி-யின் பி.எஸ். (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பாடத்திட்டம், மின்னணு உற்பத்தித் துறையில் தமிழகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த தயார் நிலையில் உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: "மின்னணுவியல் துறையில் வேகமாக வளர்ந்துவரும் தேவைகளை சமாளிக்கும் விதமாக சென்னை ஐஐடி, பி.எஸ். படிப்பை தொடங்கியுள்ளது. தொழில்துறை சார்ந்த தேவைகள், திறன் தொகுப்புகளை கருத்தில் கொண்டு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 25 ஜூன் 2023 கடைசி நாளாகும். விருப்பமுள்ள நபர்கள் கீழ்க்காணும் இணைய இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் - https://study.iitm.ac.in/es/
ஆன்லைன் முறையிலான பாடநெறியைக் கொண்டது என்பதால் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் வயது, செயல்பாடு, இருப்பிட வேறுபாடின்றி விண்ணப்பிக்கலாம். பாடத்தின் உள்ளடக்கம், பயிற்சிகள், சந்தேகங்களைத் தீர்க்கும் அமர்வுகள், அசைன்மெண்ட்கள் ஆகியவை ஆன்லைனிலேயே நடைபெறும். கேள்வி-பதில்கள், தேர்வுகள், ஆய்வக வகுப்புகள் ஆகியவை நேரில் நடத்தப்படும். ஆய்வக வகுப்புகள் சென்னை ஐஐடி வளாகத்தில் நேரடியாக நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள (Guidance Tamil Nadu) 'தமிழ்நாடு மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கை'யின்படி, 2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மின்னணுத் தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்தவும், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு ஏற்றுமதியில் 25 சதவீதத்தை உலகிற்கு வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று (7 ஜூன் 2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை ஐஐடி அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான மையத்தின் (CODE) இணைத் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "மின்னணுப் பொருட்களின் உற்பத்தியால் இந்தியாவின் தேவை பூர்த்தியாவது மட்டுமின்றி, உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. பிஎஸ் (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பட்டதாரிகள் அடிப்படை அம்சங்கள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் மின்னணுப் பொருட்கள், மொபைல்போன்கள், மருத்துவ மின்னணுப் பொருட்கள், பாதுகாப்புத் துறை போன்ற தொழில்களில் எலக்ட்ரானிக் அல்லது எம்பெடட் சிஸ்டம் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் என்ஜினியராக சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும்" என்றார்.
பி.எஸ். (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் குறித்துப் பேசிய பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சார் பயிற்சிகளைப் (Internship and Apprenticeship) பெற்று, நடைமுறை வாழ்வியலுக்கான திட்டங்களில் பணியாற்றவும், அதன்மூலம் தொழில்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த புரிதலைப் பெறவும் முடியும்.
இந்த உள்ளகப் பயிற்சிகளை நேரிலோ, ஆஃப்லைனிலோ அல்லது இரண்டும் கலந்தோ உதவித் தொகையுடன் 2 முதல் 8 மாதங்கள் வரை பெறலாம். வேலைவாய்ப்பு சார் பயிற்சியின் அடிப்படையில் மாணவர்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் உள்ளகப் பயிற்சியில் ஈடுபடும்போது அந்த நிறுவனத்தால் உள்வாங்கப்படுவதால் தங்கள் எதிர்கால வளர்ச்சியையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.
இந்தியாவை மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்பிற்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான இந்தியா செமிகண்டக்டர் மிஷன் இலக்குடன் இப்பாடத்திட்டம் இணைந்துள்ளது. மிக முக்கிய தொழில்களில் ஒன்றாக செமிகண்டக்டர் துறை உருவெடுத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்காளராக இருப்பதுடன், ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டுவதாகவும் இந்தத் துறை அமைந்துள்ளது.
இப்பாடத்திட்டத்தில் எவ்வாறு சேருவது என்பது குறித்து விளக்கம் அளித்த சென்னை ஐஐடி மின்சாரப் பொறியியல் துறையின் ஆசிரியரும், சென்னை ஐஐடி-ன் பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் போபி ஜார்ஜ், "பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை, உள்ளடக்கிய தகுதி நடைமுறைகளைக் கொண்டதாகும். இதில் சேருவதற்கு ஜேஇஇ தேவையில்லை.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை ஐஐடி ஆசிரியர்கள் நான்கு வாரங்கள் உள்ளடக்கங்களை பயிற்றுவிப்பார்கள். முழுக்க முழுக்க அந்த பாடங்களின் அடிப்படையில் மட்டுமே தகுதித் தேர்வு நடைபெறும். இக்காலகட்டத்தில் விண்ணப்பதாரர்களுக்கு விவாதமேடை, நேரடி அமர்வுகள் போன்ற வடிவில் ஊக்கம் அளிக்கப்படும். இப்பாடத் திட்டம் அடிப்படை நிலை சான்றிதழ், டிப்ளமோ, பிஎஸ் பட்டம் என்ற பல்வேறு வெளியேறும் நிலைகளைக் கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
பாடநெறி குறித்து விவரித்த சென்னை ஐஐடி-யின் மின்சாரப் பொறியியல் துறையின் ஆசிரியரும், சென்னை ஐஐடி-ன் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எஸ். அனிருத்தன், "இப்பாடத்திட்டம் கடினமானது என்றாலும் நெகிழ்வுடன் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களைப் பெற பாடத்திட்டம் முழுவதும் தொடர்ச்சியாக வழிகாட்டப்படும். அடிப்படை நிலையில் இருந்து பாடங்கள் கற்பிக்கப்படுவதால், சந்தேகங்களை தெளிவுபடுத்தும் நேரடி அமர்வுகள், நிபுணர் அமர்வுகள், கலந்துரையாடல்கள் என பலவகைகளில் திறம்பட கற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த பாடத்திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் மோட்டார் வாகனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்:
Ø எலக்ட்ரானிக் சிஸ்டர் டிசைனர்
Ø எம்பெடட் சிஸ்டம் டெவலப்பர்
Ø எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட்
Ø சிஸ்டம் டெஸ்டிங் இன்ஜினியர்
Ø எலக்ட்ரானிக்ஸ் ரிசர்ச் இன்ஜினியர்
இப்பாடத்திட்டம் அடிப்படை நிலை, டிப்ளமோ, பட்டம் என்ற மூன்று நிலைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடங்கள் உள்ளன. அடிப்படை நிலையைப் பொறுத்தவரை ஆங்கிலம், கணிதம், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் திங்கிங், பேசிக் டிஜிட்டல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் மற்றும் ஆய்வக சோதனை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். டிப்ளமோ நிலையில் இடைநிலை வகுப்புகளான சிக்னல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ், அனலாக் எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ், டிஜிட்டல் சிக்னல் ப்ராசசிங், சென்சார்ஸ் மற்றும் பயன்பாடுகள் குறித்து கற்பிக்கப்படும். பட்டப்படிப்பு நிலையில் மேம்பட்ட பாடநெறிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடநெறிகளும் இடம்பெற்றுள்ளன" என்று சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT