Published : 31 Oct 2017 11:13 AM
Last Updated : 31 Oct 2017 11:13 AM

உலக மொழிகள் பயில்வோம்: ஆங்கிலம் அல்ல, தமிழ்தான் நண்பன்!

 

கா

லை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, சுவையும் மணமும் நிரம்பிய ஃபில்டர் காபியைக் குடித்தபடி நாளிதழை வாசித்துவிட்டு, பிடித்தமான ஜீன்ஸ் பேண்டை அணிந்துகொண்டு பைக் அல்லது காரை ஓட்டி அலுவலகத்துக்குச் சென்று கணினியில் எட்டு மணி நேரம் வேலைபார்த்துவிட்டு, கடும் தலைவலியோடு வீடு திரும்பி ஒரு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை போட்டுக்கொண்டு கண் அயர்ந்து எம்பி3 பிளேயரில் பாட்டுப்போட்டுக் கேட்டால்…. இந்த நாள் இனிதே நிறைவடைந்துவிடும்.

இந்த வர்ணனையில் முக்கியக் கதாபாத்திரங்களாக விளங்கிய பற்பசை, காபிக்கான ஃபில்டர், நாளிதழை அச்சடிக்கும் ‘பிரிண்டிங் பிரஸ்’ இயந்திரம், ஜீன்ஸ் பேண்ட், கார், பைக், ‘முதல் புரோகிராமிங்’ கணினி, ஆஸ்பிரின் மாத்திரை, எம்பி3 பிளேயர் இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாமல் இயைந்து இருக்கும் பல விஷயங்களை இன்று நாம் பயன்படுத்தும் வடிவில் முதன்முதலில் தயாரித்து, வெகுஜனப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தவர்கள் யார் என்று எண்ணிப்பார்த்ததுண்டா? ஜெர்மானியர்கள்.

தமிழர்களுக்கு ஜெர்மன் எளிது!

இன்றும் ஜெர்மனி, கண்டுபிடிப்புகளின் தேசமாகவும் வாய்ப்புகளின் வாசலாகவும் மிளிர்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் மருத்துவம், பொறியியல், சி.ஏ. மட்டுமே உயரிய பணிவாழ்க்கைக்கான தொழில்முறைத் துறைகளாகக் கருதப்படுவதில்லை. மொத்தம் 330 விதமான பணிகள் அங்குத் தொழில்முறைத் துறைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் கடந்த 15 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இந்தியாவிலேயே ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டு ஜெர்மனிக்குச் சென்று மேற்படிப்பு படித்து உயரிய பணிவாழ்க்கை பெற்றுவருகிறார்கள்.

29CH_Prabhakar பிரபாகர்

குறிப்பாகத் தமிழர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது எளிது என்கிறார் சென்னையில் ஜெர்மன் மொழியைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் ஒன்றான கோதே இன்ஸ்டிடியூட்-ன் (Goethe Institut) மொழித் துறைத் தலைவரான பிரபாகர் நாராயணன்.

“ஆங்கிலப் புலமை இருந்தால் மட்டுமே அயல்நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. அது தவறு. அதிலும் ஜெர்மன் மொழியானது ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கு நெருக்கமானது.

அதன் இலக்கண அமைப்பு தமிழுக்கு மிக அருகில் உள்ளது என்பேன். உதாரணத்துக்கு, ‘எனக்கு இது பிடித்திருக்கிறது’ என்று ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘I like this’ என்போம். அதாவது ஆங்கிலத்தில் subject முதலில் இடம்பெறுகிறது. ஆனால், ஜெர்மன் மொழியும் தமிழ்போன்ற இலக்கண அமைப்பைக் கொண்டிருப்பதால் பொதுவாகவே தமிழர்கள் ஜெர்மனைச் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார் பிரபாகர்.

ஜெர்மனிக்குச் சென்ற மாநகராட்சி மாணவர்கள்

மொழியைக் கற்பிப்பது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தக் கண்காட்சி ஒன்று இந்த நிறுவனத்தின் வளாகத்திலேயே கடந்த வாரம் நடத்தப்பட்டது. அதிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை ஜெர்மன் மொழிக்கான ஒரு மையத்தில் பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. “இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் ஜெர்மன் மொழியைப் படிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ப பிரத்தியேகமான பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

சி.பி.எஸ்.சி. பள்ளிகளைப் பொறுத்தவரை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2-வில் ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அவ்வாறு ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாங்கள் இலவசமாகச் சிறப்பு பயிற்சிகள் ஆண்டுதோறும் வழங்கிவருகிறோம்.

மூன்று மாதங்களுக்கு முன்புகூட அவ்வாறு எங்களிடம் பயிற்சி பெற்ற மாநகராட்சி மாணவர்களில் 8 பேரை 3 வாரம் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று இலவசமாக அங்கும் மேம்பட்ட ஜெர்மன் மொழி பயிற்சி அளித்து அழைத்துவந்தோம். ஆங்கிலத்தைக் காட்டிலும் அக்குழந்தைகள் ஜெர்மன் மொழியைச் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஜெர்மனியில் மட்டுமல்லாமல் இந்தியா உட்பட ஜெர்மன் மொழியை அடிப்படையாகக் கொண்ட உலகின் முன்னணி நிறுவனங்களில் அவர்கள் பணிபுரியலாம்” என்கிறார் பிரபாகர்.

முழுக்க இலவசக் கல்வி

ஜெர்மனி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டவர்களும், மென்பொருள் துறையில் பணியாற்றும் விருப்பம்கொண்டவர்களும், வாகனத் தொழில் உலகில் சாதிக்கத் துடிப்பவர்கள் மட்டுமே 20 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்று உயர் கல்வி பெற்றார்கள். ஆனால், இன்று இந்தியர்களை ஜெர்மனி பக்கம் சுண்டி இழுப்பது, ஜெர்மானியர்களுக்கு மட்டுமின்றி எல்லா நாட்டினருக்கும் முற்றிலும் இலவசக் கல்வி அளிக்கும் அவர்களுடைய கல்விக் கொள்கைதான்.

“ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள மொத்தம் உள்ள 6 நிலைகளில் B2 எனப்படும் 4-வது நிலையில் தேர்ச்சி பெற்றால் ஜெர்மனிக்குச் செல்ல நீங்கள் தகுதி பெறுவீர்கள். அதன் பிறகு ஜெர்மனிக்குச் சென்று எந்தப் பணியைச் செய்ய விருப்பம் உள்ளதோ அதற்கான கல்வியை இலவசமாகப் பெறலாம். மறுபுறம் கல்வித் துறையில் வேலை பார்ப்பதுதான் உங்களுடைய விருப்பமாக இருக்கும்பட்சத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் உள்ளிட்டவற்றைப் படிக்கலாம்.

அதிலும் பி.எச்டி. படிக்க இலவசக் கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் உதவித்தொகையும் அங்கு உள்ள 350 பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்படுகிறது” என்கிறார் கடந்த 20 ஆண்டுகளாக கோதேவின் மூத்த ஆசிரியராகப் பணிபுரியும் சேரலாதன்.

கல்வி முற்றிலும் இலவசம் என்பது மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு, மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணச் சலுகை போன்ற அனுகூலங்கள் ஜெர்மனியில் உள்ளன.

“இந்தியாவைப் போல வேலையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் பிரச்சினையோ ஊதியச் சிக்கலோ ஜெர்மனியில் கிடையாது. அங்குச் சிகை திருத்துபவர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், ஆசிரியர், மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் அதற்குரிய படிப்பைப் படித்திருக்க வேண்டும். எல்லோருக்குமே அரசுதான் உரிய சம்பளத்தை நிர்ணயிக்கிறது. அதேபோல படித்துமுடித்த பிறகு வேலை தேட ஒன்றரை ஆண்டுகள்வரை விசா நீட்டிக்கப்படும்.

எட்டாண்டுகள் அங்குப் பணிபுரியும் பட்சத்தில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கார், மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் என இந்தியாவிலேயே பல முன்னணி ஜெர்மானிய நிறுவனங்கள் செயல்பட்டுவருவதால் இந்தியா திரும்பி வந்தும் நல்ல பணிவாய்ப்பு பெறலாம்” என்கிறார் சேரலாதன்.

தமிழ் வழிக் கல்வி படிக்கும் நம்முடைய கடைநிலை மாணவ, மாணவிகளும் உலகின் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்குச் சென்று தரமான இலவசக் கல்வி பெறலாம் என்பது எதிர்காலத்தில் தமிழர்கள் ஜெர்மன் மொழியால் உலகை ஆளலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்குகிறதல்லவா!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x