

திருவள்ளூர்: வடகரை, அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்க வரும் ஜூன் 7-ம் தேதி கடைசி நாளாகும்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆதிதிராவிடர் நலத் துறை), சென்னை, அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் பிட்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு தொழிற் பிரிவுகளின் கீழ் தொழிற் கல்வி அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தொழிற் பிரிவுகளில், 2023 - 24-ம் கல்வியாண்டில் சேர விருப்பம் உள்ள 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் www.skilltraining.tn.gov,in என்ற இணைய தளத்தில் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வரை நேரடியாகவோ, 044-26252453 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.