Published : 13 Jul 2014 06:43 PM
Last Updated : 13 Jul 2014 06:44 PM
வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் தலைவர்கள், பொது நிகழ்ச்சிகளில் ஆடை கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார்.
வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்குக்குள் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர்கள் மறுத்தனர். "பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வேட்டி அணிந்து வந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது கிளப் விதிமுறை" என்று கூறிய ஊழியர்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரும் வேட்டி அணிந்து வந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கருணாநிதி கண்டனம்
இந்தச் சம்பவத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, "தமிழர்களின் கலாச்சாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
பொதுவாக தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வர வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்குவதற்கு அரசே முன்வந்து அறிவுரை வழங்குவதுதான், இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஞானதேசிகன் வலியுறுத்தல்
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில், "உடை என்பது மனித நாகரிகத்தின் ஒர் அடையாளம். அது எந்த உடையாக இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ளமுடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்கூடாது என்று வற்புறுத்துகின்றேன்" என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் கண்டனம்
வேட்டி கட்டியவர்களை அடிமை போலக் கருதி கிளப்களில் அனுமதி மறுக்கப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய உடைகளுக்கு மரியாதை அளிக்காத கிளப்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.