Published : 06 Jul 2014 09:00 am

Updated : 06 Jul 2014 15:02 pm

 

Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 03:02 PM

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?

ஜெர்மனியில் தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி சுகன்யாவும் அசோக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சென்றிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இருவரும் ஹோட்டல் வாசலில் காருக்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த ஜெர்மானியர் ஒருவர் சுகன்யாவைப் பார்த்து, “யூ லுக் வெரி பியூட்டிஃபுல் இன் திஸ் இண்டியன் டிரெஸ்” (நீங்கள் இந்த இந்திய உடையில் மிக அழகாக இருக்கிறீர்கள்) என்று சொன்னார். அதற்கு நன்றி கூறிவிட்டு திரும்பிய சுகன்யாவுக்கு விழுந்தது கன்னத்தில் ஒரு அறை. அறைந்தது அவளுடைய கணவன் அசோக். சற்றும் எதிர்பாராமல் வந்த அடியின் அதிர்ச்சியில் உறைந்த சுகன்யா தான் செய்த தவறு என்ன என்று புரியாமல் நின்றாள். “எவனோ ஒருவன் உன்னைப் புகழ்ந்ததற்கு நன்றி வேறு சொல்கிறாயா?” என்று அனைவர் முன்பும் திட்டித் தீர்த்துவிட்டு மீண்டும் ரூமுக்கே கோபமாகத் திரும்பச் சென்றான் அசோக். கண்ணீர் மல்க அவன் பின்னால் ஓடினாள் சுகன்யா. பல கனவுகளோடு அடியெடுத்து வைத்த புதுவாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நடந்த இந்த நிகழ்வைத் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் சுகன்யாவால் மறக்க முடியவில்லை. இது சினிமாவில் பார்க்கும் காட்சிபோலத் தோன்றினாலும் உண்மையாக என் தோழிக்கு நடந்தது என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை.

கன்னத்தில் விழுந்த அறை


கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு என்னுடன் பள்ளியில் படித்தவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பள்ளித் தோழிகள் 12 பேர் சந்தித்ததில் எல்லாருக்கும் ஏக சந்தோஷம். பள்ளி நாட்களின் நினைவுகளைப் பரிமாறிக்கொண்ட பின் அவரவரின் தற்போதைய வாழ்கையைப் பற்றி பேசத் தொடங்கினோம். என் தோழிகளில், மூன்று பேருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி இருந்தது. மற்றவர்களின் மண வாழ்க்கை ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தது. இதில் சுகன்யாவும் ஒருவர். சுகன்யாவின் கணவர் நன்கு படித்த பெரிய தொழிலதிபர் என்றாலும், தேனிலவில் ஆரம்பித்த அடி இன்றும் தொடர்வதாகச் சொல்லிக் குமுறினார். மற்றொரு தோழி கல்பனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரும் இதில் மாறுபடவில்லை.

கல்யாணமாகி முதன்முதலில் வெளியே சென்றபோது, கால் தடுக்கிக் கீழே விழுந்தபோது அவளுக்குக் கை கொடுத்து உதவவில்லை. ஏன் பார்த்து நடக்கவில்லை என்று கேட்டும் கன்னத்தில் அறைந்தார் என்று கண் கலங்கிச் சொன்னாள். பெற்றோரிடம் இது பற்றிச் சொன்னதற்கு, குடும்பம் என்றால் சற்று பொறுத்துதான்போக வேண்டும் என்றே சுகன்யா, கல்பனா இருவருக்கும் அறிவுரை கிடைத்திருக்கிறது.

தொடரும் குடும்ப வன்முறை

சென்னை மாநகரில் பிறந்து, வளர்ந்து, பிரபல பெண்கள் பள்ளியில் படித்த என் தோழிகள் திருமணமாகி, கணவரின் அடி உதையைப் பொறுத்துப் போகிறார்கள் என்பதைச் சற்றும் நம்ப முடியவில்லை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு பி.ஈ., எம்.எஸ், எம்.பி.ஏ. என்று ஐ.ஐ.டி. மற்றும் அமெரிக்காவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டுப் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் இவர்கள். தத்தம் துறைகளில் சாதித்த இந்தப் பெண்கள், கணவரின் வன்முறையைச் சகித்து வாழ்வது தங்கள் குழந்தை மற்றும் பெற்றவர்களுக்காக மட்டும்தான். இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் திருமண வாழ்வின் சில வருடங்களுக்குப் பின் கணவரின் தாக்குதலை எதிர்க்கத் தொடங்கியதால் வன்முறையின் அளவு சற்று குறைந்துள்ளது. தினம் தினம் வீட்டு வேலையோடு, குழந்தையைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அலுவல் வேலையையும் முடித்து வீடு திரும்பும் எத்தனையோ படித்த பெண்களுக்கும் இதுதான் நடக்கிறதோ என்ற பய உணர்வு ஏற்படுகிறது.

பொறுத்துப் போகும் பெண்கள்

விவாகரத்து என்ற சொல்லைக் கேட்ட உடனே தொட்டதுக்கெல்லாம் டைவர்ஸ், பிரிந்துவிடுவது என்று ஏளனப் பேச்சு பேசுவோருக்குப் புரியாது பெண்களை அந்த முடிவுக்குத் தள்ளிய காரணங்கள் என்னவென்று. என் தோழிகளில் விவாகரத்து ஆன மூவரில், ஒருவரின் கணவர் திருமணத்திற்கு முன்பே அமெரிக்காவில் வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்ட உண்மை தெரியவந்தது. மற்ற இருவரின் கணவர்களும் குடித்துவிட்டு வந்து தினம் தினம் அடி உதை, சந்தேகம் என்று சித்திரவதை செய்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். என் தோழிகள் 12 பேரில் ஐவர் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் படித்த நகரப் பெண்களில் பலரும் ஏதோ ஒரு வகையில் கணவனால் ஒடுக்கப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

எப்போதும் கிடைக்கும் அறிவுரை

பலவகை சுதந்திரத்தைப் பற்றி பேசத் தொடங்கியுள்ள இந்த நூற்றாண்டிலா படித்த பெண்கள் மீதும் வன்முறை என்று பலர் நம்பக்கூட மறுப்பர். ஆனால் உண்மை இதுவே. குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோரின் அறிவுரை, சமூகத்தின் பார்வை இவை அனைத்திற்காகவும் அன்றும், இன்றும் பெண்கள் அடங்கி, தாங்கிக்கொண்டுதான் வாழ்கின்றனர். ஒரே ஒரு வித்தியாசம் இன்றுள்ள பெண்கள் படிப்பு, உயர் பதவி என்ற கூடுதல் தகுதிகளோடு அதே சூழ்நிலையில் உள்ளனர்.

மனைவியை அடித்து, உதைக்கும் ஆண்களில் பலரும் மேற்படிப்பு படித்து, வெளிநாடுகளுக்குச் சென்று, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களாக உள்ளனர். பணியிடத்தில் தங்களோடு பணிபுரியும் பெண்களிடம் காட்டும் அதே மரியாதையை மனைவியிடம் காட்டத் தவறுவது ஏன்? படிப்பறிவு என்பது ஒருவனுக்குப் பாட அறிவோடு, சமூகப் பார்வை, ஒழுக்கம், சக மனித மரியாதை போன்றவற்றைப் போதிக்க தவறியதைத்தான் காட்டுகிறது. சிறு வயதிலிருந்து ஆண்மகனை வளர்க்கும் தாய் ஒரு பெண்ணிடம் குறிப்பாக மனைவியிடம் நடந்துகொள்ளும் முறையை, நேயத்தைக் கற்பிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. குழந்தையைக்கூட கைநீட்டி அடிக்கத் தடைவிதித்துள்ள பல நாடுகள் மத்தியில், பொது இடம் என்றும் பாராமல் சர்வ சாதாரணமாக மனைவியை அடித்துவிட்டுப் போகும் கணவன்களைப் பார்க்கும்போது வெட்கக்கேடாக உள்ளது.

மனைவிக்கு மரியாதை

சாலையோரத்தில் மனைவியை அடித்து உதைக்கும் பல கணவன்களைக் கண்டும் காணாமல் போவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. குடிசையில் வாழ்பவன் வீட்டுக்கு வெளியே மனைவியை அடிக்கிறான், அதைத் தாண்டிச் செல்பவன் பெரிய அடுக்குமாடி ஃபிளாட்டில் நான்கு சுவருக்குள் அதே கொடுமையைப் புரிகிறான் என்று. வேலையிலிருந்து களைப்புடன் திரும்பும் கணவன், கோபம் வந்து கை ஓங்கலாம் என்றால் வீட்டு வேலையோடு வேலைக்கும் சென்று திரும்பிவரும் பெண்களுக்கும் அதே கோபம் வந்தால் என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அடங்கியிருந்த பெண்கள் இன்று சுயமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்களே வன்முறையில் இறங்குகிறார்கள். ஆனால் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், இன்றளவும் பெண்கள் எவ்வளவோ விட்டுக் கொடுத்துதான் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். அதைச் சரிவரப் புரிந்து கணவர்கள் மனைவியைச் சக மனுஷியாக நடத்தினாலே போதும்.


ஜெர்மனிதேனிலவுபுதுமணத் தம்பதி சுகன்யாமனைவிக்கு மரியாதை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x