Last Updated : 22 Jun, 2014 05:15 PM

 

Published : 22 Jun 2014 05:15 PM
Last Updated : 22 Jun 2014 05:15 PM

திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

பொதுவாகத் திரைப்படங்கள் பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் கொண்டாடுகிற மாதிரி மாயையை உருவாக்கினாலும் பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழில் வெளிவந்த இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

உன் சமையல் அறையில் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரை நோக்கி போடா வாடா என்கிற ஆண்களை அழைப்பதற்கான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்தின் பொதுப்புத்தியே, ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களை நோக்கி மீண்டும் மீண்டும் அவனது ஆண் தன்மையை நினைவுபடுத்தும் விதமாக அவன் இவன் என்று அழைப்பது. தவிர, திருநங்கைகளை டேய் என்று அழைப்பது அவர்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் படம் எடுத்திருப்பது பெரிய வருத்தத்தையே கொடுக்கிறது.

ஆடைதான் அடையாளமா?

இரண்டாவது படம் மஞ்சப்பை. பேருந்து நிறுத்தத்தில் நவீன உடையணிந்து நின்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அங்கங்களை உரசிப்பார்க்க ஒருவன் சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பான். கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த கதாநாயகனின் தாத்தா உடனே அந்த ஆணை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை அழைத்துக்கொண்டு அவளது வீட்டிற்குச் செல்வார். அவளுடைய தந்தையை அழைத்து, அவரது கன்னத்தில் ஒரு அறை விடுவார். அடுத்து பேசும் வசனங்கள்தான் மிக முக்கியமானவை. “காலம் கெட்டுப்போய் கிடக்கிறது, பொம்பள புள்ளைய இப்படிதான் அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு அலையை விடுவியா?” என்பார்.

இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அந்தத் தாத்தாவைப் பார்க்கும் பெண்ணின் தந்தை, “என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். தாய் இல்லாத பெண் குழந்தை. அதான் அதுங்க இஷ்டம் போல வளர்த்துவிட்டேன். இப்போ அவங்களே ஒழுங்கா டரெஸ் போடக் கத்துக்கிட்டாங்க” என்கிற அர்த்தத்தில் பேசுவார். நியாயப்படி தாத்தாவின் கன்னத்தில், அந்தப் பெண்ணின் தந்தைதான் அறை விட்டிருக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில்தான் இருக்கிறது, அவர்கள் அரைகுறையாக உடையணிந்தால் பார்க்கிற ஆண்களுக்கு அவளை அனுபவிக்கத்தான் தோன்றும் என்கிற பொதுப்புத்தி சிந்தனைக்கு சாமரம் வீசியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

தொடரும் பெண் அடிமைத்தனம்

ஆண்கள் தங்களுக்கு வசதியான, தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடை அணிந்துக்கொள்ளலாம். ஆனால் பெண்கள் எப்போதுமே, எல்லா பாகங்களையும் இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் உடை அணிய வேண்டும் என்பது காலம்காலமாக இங்கே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நிஜ வாழ்க்கையில் இந்த அநீதியில் இருந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதனைத் தடுக்கும் விதமாக, இந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.

பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களைத் தொடர்ச்சியாகக் கொச்சைபடுத்தும் விதமாகவும் காட்சியமைப்புகளைத் தமிழ் சினிமா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது. சில நடிகர்கள், காமெடி என்கிற பெயரில் தொடர்ச்சியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்துவதும் நடந்து வருகிறது.

எதிர்ப்பைப் பதிவு செய்வோம்

மஞ்சப்பை படத்தில், மொபைல் போன் மாற்றுவது மாதிரி, ஆண் நண்பர்களையும் தொடர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று ஒரு பெண்ணே வசனம் பேசுவது போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. ஆண்கள் தங்களுக்கு சாதகமான, அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சூழலைப் பெண்களை வைத்தே அரங்கேற்றிவருகிறார்கள் என்பது எத்தனை பெரிய அவலம்.

இந்த மாதிரியான படங்களுக்கு எதிராக, பெண்களும், பெண் படைப்பாளிகளும் தொடர்ந்து போராட வேண்டும். பெண்களைப் பற்றிய மோசமான வசனங்களோ, அவர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வகையிலான காட்சிகளையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தொடர் போராட்டங்கள் மட்டுமே இப்படியான அவலங்களுக்கு முடிவு கட்டும். இந்தப் போராட்டத்தையும் தாண்டி, திரைப்பட தணிக்கைக் குழுவினரும் பெண்களுக்கு எதிரான இப்படிபட்ட காட்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

நீங்க என்ன சொல்றீங்க?

இப்படி திரைப்படங்களில் பெண்களைக் கேவலமாகச் சித்தரிப்பது குறித்தும் அதற்கு என்ன தீர்வு என்பது குறித்தும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x