Published : 12 Feb 2014 09:31 am

Updated : 06 Jun 2017 19:27 pm

 

Published : 12 Feb 2014 09:31 AM
Last Updated : 06 Jun 2017 07:27 PM

ராகுல் காந்தி முன்வைக்கும் அரசியல் எடுபடுமா?

துருவ நட்சத்திரத்தின் கனவு இது - ஜோதிமணி

குத்துச்சண்டைக் களம் போலாகிவிட்ட இந்தியத் தேர்தல் களத்தில் நடக்கும் தனிநபர் அவதூறுப் பிரச்சாரங்கள், பிரிவினைவாதப் பேச்சுகள், மலிவான பொய்கள், போலியான வாக்குறுதிகளுக்கு இடையே மிக ஆழமான தொலைநோக்குச் சிந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. நமது அரசியல், நிர்வாக அமைப்பை அடியோடு மாற்ற வேண்டும் என்பதே அது. ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் ஏற்படும்போது, நாம் ஆட்களை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம். மாற்றவும் செய்கிறோம். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவதைப் பார்த்துக் கோபமும் சலிப்பும் ஏற்படுகிறது. ஆனால், அமைப்பு மாறினால் ஆட்களும் மாறித்தான் ஆக வேண்டும்.


முதலில் தற்போதைய அமைப்பிலுள்ள பிரச்சினைகள் என்ன என்று பார்க்கலாம். ராகுல் மிகத் தெளிவாக, மூன்று விஷயங்களை முன்வைக்கிறார். ஒருவரிடமோ/ஒரு குழு விடமோ குவிந்துகிடக்கும் அதிகாரம், மூடியிருக்கும் அரசியல் அமைப்பு, பெண்களை அதிகார மற்றவர்களாக ஆக்கியிருக்கும் அமைப்பு.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

தற்போது அதிகாரம் உயர்நிலையில் ஆதிக்கம் செலுத்துகிற அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆதிக்க சாதியினர், ஆண்கள் மற்றும் பெருமுதலாளிகள்/செல்வந்தர்கள் இவர்களிடம் குவிந்துகிடக்கிறது. இந்தச் சில நூறு பேர்கள்தான் அரசியல் கட்சிகள், அரசு, நிர்வாகம், ஊடகம் மற்றும் தொழில்துறை என்று இந்த தேசத்தையே கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் பெரும்பான்மையினரான விளிம்பு

நிலை மக்கள், பெண்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகாரமிழந்து வெறும் பார்வையாளர்களாகிவிட்டார்கள். இந்த கோடிக் கணக்கான மக்களை அதிகாரப் படுத்துகிற ஒரு புதிய அமைப்புக்கான தேவையைத்தான் ராகுல் முன்வைக்கிறார்.

காங்கிரஸைத் தாக்கும் ராகுல்

ராகுல் மூடப்பட்ட அரசியல் கட்சிகள்மீது (காங்கிரஸ் உட்பட) தாக்குதலைத் தொடுக்கிறார். எந்தவொரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், மிக ரகசியமான முறையில்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் இயங்குகின்றன. இந்திய ஜனநாயகம் என்பது அரசியல் கட்சிகள் வழியிலான நாடாளுமன்ற ஜனநாயகம். உண்மையில், அதிகாரக்குவிப்பு என்பது அரசியல் கட்சிகள் வழியாகத்தான் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள்தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன, அரசுகளை அமைக்கின்றன, கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. அந்த முடிவுகள்தான் தேசத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது.

நிலைமை இப்படி இருக்கும்போது, அரசியல் கட்சிகளை மக்கள் எப்படிக் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? கட்சிகள் தகுதியற்ற வேட்பாளர்களை நம் மீது திணிக்கும்போது, நமக்கு எவ்வளவு கோபமும் இயலாமையும் ஏற்படுகிறது? ஆனாலும், இருப்பதில் சுமாரான ஒருவருக்கு வாக்களிப்பது தவிர, நம்மால் என்ன செய்ய முடிகிறது? அமெரிக்காவில் இருப்பதுபோல வேட்பாளர் தேர்வு மக்களின் பங்கேற்போடு வெளிப்படையாக நடக்குமானால், ஒருவர் எப்படி மக்கள் பணியாற்றாமல் வேட்பாள ராகவும் அமைச்சராகவும் ஆக முடியும்? ஆக, அரசு மட்டத்தில் எதிரொலிக்கும் பிரச்சினைகளின் ஆணிவேர் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் ஆரம்பிக்கிறது. இதனால்தான், அரசியல் அமைப்பை (பொலிட்டிகல் சிஸ்டம்) அடியோடு மாற்ற வேண்டும் என்ற கருத்தை ராகுல் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

பெண்களுக்கு அதிகாரம்

மூன்றாவதாக, இதுவரை பெரியாருக்குப் பிறகு எந்தவொரு தலைவரும் முக்கியப் பிரச்சினையாக அடையாளப்படுத்தியிராத, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ராகுல் முக்கியச் செயல்பாடாக முன்வைக்கிறார். மக்கள்தொகையில் 50% உள்ள பெண்களை அனைத்துத் தளங்களிலும் அதிகாரப்படுத்தாமல் ஏற்படுகிற வளர்ச்சி பாதி வளர்ச்சிதான். அப்படியொரு வளர்ச்சி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று நிராகரிப்பதன் மூலம், பெண்களை அதிகாரப்படுத்துவதை அவர் முன்வைக்கிற புதிய அமைப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக அடையாளப்படுத்துகிறார்.

இந்த அடிப்படையான பிரச்சினைகளைச் சரிசெய்வதன் மூலம் ஊழலற்ற நிர்வாகம், அனைத்துப் பிரிவினருக்கும் வர்க்கத்தின ருக்கும் சம வாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இறுதியில் சாத்தியமாகும். சமூகநீதிக்கு ஆதரவான, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அரசியல் களத்திலும் வென்றெடுக்கக் கூடிய வாய்ப்பை இது உருவாக்குகிறது.

எப்படிச் சரிசெய்வது?

முதலில் அரசியல் கட்சிகளை ஜனநாயக மான, வெளிப்படைத்தன்மையுள்ள அனைத்துப் பிரிவினரும் முடிவெடுக்கும் இடத்தில் உரிய பிரதிநிதித்துவம் உள்ள அமைப்புகளாக மாற்ற வேண்டும். கட்சித் தேர்தல்களைத் தேர்தல் விதிகளுக்கும், வெளித்தணிக்கைக்கும் உட்பட்டு, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டுடன் நடத்தப்பட வேண்டும். வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் அந்தந்தத் தொகுதி மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், முதன்மைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து அமைப்புகளையும் கொண்டு வரும்போது, அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்படக் கூடாது. இவற்றைச் செய்வதன் மூலம் அரசியல் கட்சிகளில் குவிந்துகிடக்கிற அதிகாரத்தைப் பரவலாக்க முடியும்.

தொலைநோக்குச் சிந்தனை

இந்தச் சீர்திருத்தங்களை, இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸில் ராகுல் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். இந்த அமைப்புகளில் வெளித்தணிக்கைக்கு உட்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வெளிப்படையான தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் சராசரி வயது தோராயமாக 55 இருக்கலாம். அங்கே ஆரம்பிப்பதைவிட அடுத்து 30 ஆண்டுகளுக்கு இந்த தேசத்தை மாற்றக் கூடிய சக்தியுள்ள இளைஞர்களிடம் ஆரம்பிப்பதுதான் நல்லது என்ற தொலைநோக்குச் சிந்தனையுடனேயே மாணவர், இளைஞர் காங்கிரஸிலிருந்து ஆரம்பித்தார்!

முதல் பரிசோதனை

இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பரிசோதனை முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முதன்மைத் தேர்தல் 15 தொகுதிகளில் நடைபெறுகிறது. பிறகு, இது படிப்படியாக அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த தேசம் அற்புதமான தலைவர்களைப் பார்த்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் அடிமை இந்தியாவை உலகில் வேகமாக வளர்ந்துவருகின்ற முக்கியமான நாடுகளில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், வளர்ந்துவருகிற எதிர்பார்ப்புகளும், சக்தியும் நிறைந்த 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் வேகத்துக்கும் லட்சிய வேட்கைக்கும் ஈடு கொடுக்க வேண்டும் என்றால், இப்போது சில நூறு பேர்களிடம் குவிந்துகிடக்கிற அதிகாரம் மக்கள் கைகளுக்கு மாற வேண்டும். மக்கள் அதிகாரப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அரசியலையே ராகுல் தன் அரசியல் லட்சியமாக முன்வைக்கிறார்.

- ஜோதிமணி,செய்தித் தொடர்பாளர், இந்திய தேசிய காங்கிரஸ், தொடர்புக்கு: jothimani102@gmail.com

மண் குதிரையால் ஆற்றைக் கடக்க முடியாது- சி.மகேந்திரன்

1950-ல் அறிவிக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம், இதற்கான வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளது. மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான மக்கள் நல ஆட்சிதான், இந்தியாவின் தொலைநோக்கு. இதை நிறைவேற்ற பொதுத் துறையை உருவாக்கி, வேலைவாய்ப்பையும் உற்பத்தியையும் பெருக்க வேண்டும் என்பது நேருவின் தொலைநோக்கு. தனியாரிடம் இருந்த வங்கிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்த பெட்ரோல் ஆதிக்கத்தையும் நாட்டுடமையாக்கும் தொலைநோக்கு இந்திரா காந்தியிடம் இருந்தது. ஆனால், இன்றைய தொலைநோக்கு எது?

கார்ப்பரேட் உலகமயத்தின் தொலைநோக்கு தான், இந்தியாவின் தொலைநோக்கு. மக்களின் சமத்துவ வாழ்வைப் பற்றி ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த நோக்கத்தை குறைத்துக் கூற எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், ஏற்றத்தாழ்வான இந்திய சமூகத்தை மேலும் ஏற்றத்தாழ்வுடையதாக மாற்றியது எது? 1990-க்குப் பின்னர், கார்ப்பரேட் நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட, புதிய பொருளாதாரக் கொள்கைதான். இந்தியப் பணக்காரர்களை இது, உலகப் பணக்காரர்களாக மாற்றிவிட்டது. அதைப் போல, உலகிலேயே ஏழைகள் அதிகம் வாழும் நாடாக இந்தியா மாறிவிட்டது.

பா.ஜ.க-வுக்கும், இதில் பங்கு இருக்கிறது. ராகுல் காந்தியின் தொலைநோக்கு இதுபற்றி ஏதாவது சிந்தித்து வைத்திருக்கிறதா?

கடையேனுக்கும் கடைத்தேற்றம்

ராகுல் சொல்கிறார், “ஆட்களை மாற்றிப் பயனில்லை. ஆட்சிமுறையையே மாற்ற வேண்டும்” என்று. இந்த மாற்றம் ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்' என்று காந்தியடிகள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதுபற்றிய அடிப்படையான ஞானம், ராகுல் காந்திக்கு உண்டா என்பதும் நமக்குத் தெரிய வில்லை. இதைச் செய்ய வேண்டும் என்றால், சொத்துடமையின் மையமாக இருக்கும் உற்பத்திச் சாதனங்களை சமூக உடமையாக்க வேண்டும். இது ஒரே நாளில் நிறைவேற்றக்கூடிய ஒன்றல்ல என்பதை நாம் நன்கறிவோம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரப் பயணம் இதற்கு எதிர்த் திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது ராகுல் காந்திக்கு எவ்வாறு தெரியாமல் போனது?

நோய் மறைந்துள்ள இடம்

அதிகாரக் குவிப்பு, அரசியல் கட்சிகளின் வெளிப்படைத் தன்மை. பங்கேற்பு ஜனநாயகத் துக்கு முன்னுரிமை ஆகியவற்றைப் பற்றி ராகுல் பேசுகிறார். சட்டத்துக்குப் புறம்பாக அரசியல் கட்சிகள் சேர்த்துள்ள கள்ளப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறது. சுவிஸ் வங்கி போன்றவற்றில் ஒளிந்து, தலைமறைந்து வாழ்ந்துவிட்டு, தேர்தல் காலத்தில் இந்தியாவுக்கே மீண்டும் வந்துவிடுகிறது. இதுதான் எல்லா வாழ்வுரிமையையும் இழந்து, வாக்குரிமையை மட்டும் கையில் வைத்துள்ள மக்களிடம் அதனை யும் விலை பேசி நிற்கிறது. நோய் மறைந்துள்ள இடம் இதுதான். இதற்கான சிகிச்சையை இங்கிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கான திட்டம் ராகுலிடம் இருக்கிறதா?

விகிதாச்சாரத் தேர்தல் முறை

இன்றைய தேர்தல் முறையில் அடிப்படை மாற்றம் வேண்டும். இந்தியா முழுமையிலும் நாடாளுமன்றங்களில் வெற்றி பெற்றவர்களின் வாக்குகளையும், தோல்வி அடைந்தவர்களின் வாக்குகளையும் கூட்டிப் பார்த்தால், தோல்வி அடைந்தவர்களின் வாக்குகள்தான் கூடுதலாகத் தெரிகிறது. இதைவிடவும் ஜனநாயகத்தில் வேறு ஏமாற்று வேலை இருக்க முடியுமா? இந்த தேர்தல் முறையில் கொள்கையாளர்கள் கையில் பணம் இல்லை என்ற காரணத்துக்காக மிகவும் மோசமாக நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்கு மாற்றுத் தேர்தல் முறை விகிதாச்சாரத் தேர்தல் முறை. இந்த அடிப்படையான ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம்பற்றி ராகுலின் பதில் என்ன?

மண் குதிரைப் பயணம்

எதிர்கால அரசியலில் அடிப்படை மாற்றத்தை இளைஞர் காங்கிரஸ் மூலம் ராகுல் தொடங்கி யிருப்பதாகத் தமுக்கடிக்கிறார்கள். இளைஞர் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களின் லட்சியம், அரசியலிலும் கட்சிகளிலும் அடிப்படை மாற்றத்துக்கான போராட்டத்திலா அல்லது நாடாளுமன்றத்தில் ஆளுக்கொரு சீட்டு வேண்டும் என்ற போராட்டத்திலா? புரிந்து கொள்ள முடியவில்லை.

ராகுல் காந்தியின் இந்தப் புதிய கருத்துகளும், புதிய செயல்பாட்டு அறிவிப்பும் மண் குதிரையைப் போன்றது. இதில் பயணம் செய்து எந்த ஆற்று நீரையும் கடந்துவிட முடியாது.

- சி.மகேந்திரன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர், தொடர்புக்கு: thamarai_mahendran@yahoo.co.in


ராகுல் காந்திஅரசியல்காங்கிரஸ்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவிகிதாச்சாரத் தேர்தல் முறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x