Published : 10 Oct 2014 08:30 am

Updated : 21 Jun 2017 18:02 pm

 

Published : 10 Oct 2014 08:30 AM
Last Updated : 21 Jun 2017 06:02 PM

ஜெயலலிதாவின் செல்வாக்கு இனி என்னவாகும்?

என்றும் அப்படியே தொடரும்!

பத்ரி சேஷாத்ரி

ஜெயலலிதா பிணையில் வெளியே வந்ததும் தமிழக அரசை எப்படித் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பார் என்பதுகுறித்து நாம் சிந்திக்கத் தேவையே இல்லை என்று நினைக்கிறேன். இதற்குப் பல முன்னோடிகள் உள்ளனர்.

சோனியா முதல் ராமதாஸ் வரை

பத்தாண்டுகள் இந்தியாவின் ஆட்சி சோனியா காந்தியின் கைகளின் இருந்தது. அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆனால், பெயரளவுக்குத்தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். சஞ்சயா பாரு, நட்வர் சிங் ஆகியோரின் புத்தகங்கள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. சோனியா காந்தியின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி பிரதமர் அலுவலகத்தை வழிகாட்டி நெறிப்படுத்த என்றே புலோக் சாட்டர்ஜி என்று ஒரு தனிச் செயலர் பிரதமர் அலுவலகத்தில் இருந்தார்.

பால் தாக்கரேயின் வாழ்நாளில் மகாராஷ்டிரத்தில் அமைந்த சிவசேனை - பாஜக கூட்டணி ஆட்சி, தாக்கரேயின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராகக்கூட இல்லை. தாக்கரே விரும்பியவர்தான் முதல்வர். அவர் சுட்டிக் காட்டியவர்கள்தான் அமைச்சர்கள். ஏன், தமிழகத்திலேயே ராமதாஸ் இருக்கிறாரே, அதிகாரபூர்வமாகப் பார்த்தால், அவர் பாமகவின் தலைவர்கூடக் கிடையாது (நிறுவனர்).

இவர்கள் எல்லோரையும்விட பின்னிருந்து இயக்கும் வேலையை ஜெயலலிதாவால் மேலும் எளிதாகச் செய்துவிட முடியும். அஇஅதிமுக என்ற கட்சியில் ஜெயலலிதாவுக்கு அடுத்து இரண்டாவது தலைவர்கூடக் கிடையாது. ஏற்கெனவே, துறைச் செயலர்கள், தலைமைச் செயலர், சிறப்பு ஆலோசகர்கள், தனிச் செயலர்கள் ஆகியோரின் துணையுடன் ஜெயலலிதா தமிழகத்தை நேரடியாக ஆண்டுவந்தார். இனி, முதல்வர் என்ற பதவி இல்லாமல் அதையே செய்வதற்கு அவருக்கு ஒரு எதிர்ப்பும் இருக்காது.

முன்பே நடந்ததுதானே?

அரசியல் அமைப்புச் சட்டம் இதனை எதிர்பார்த்திருக்க வில்லை. கட்சியின் தலைவர், அரசின் தலைவருக்கு மேலானவராக இருந்து, தன் விருப்பத்தை அரசின் ஆணையாக ஆக்கக்கூடிய வல்லமை படைத்தவராக இருந்தால் என்ன செய்வது என்று, அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கவில்லை. சோனியா காந்தியும் பால் தாக்கரேயும் இந்தப் போதாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். 2002-ம் ஆண்டில் ஜெயலலிதாவே சுமார் ஆறு மாதங்களுக்கு இதனைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார். அப்போதும் ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வர்.

அன்றிலிருந்து இன்று கட்சியின் மீதான ஜெயலலிதாவின் பிடி கூடித்தான் போயிருக்கிறது. ஜெயலலிதாவை பாரதப் பிரதமராகவே அவருடைய கட்சியினர் பார்க்கிறார்கள். இன்று ஜெயிலில் ஜெயலலிதா இருக்கும் நிலையில், கட்சி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூடத் தீர்மானிக்கச் சக்தியற்ற வர்களாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். இனி, ஜெயலலிதா சிறையிலிருந்து பிணை பெற்று வெளியில் வரும் வரை கட்சியும் தமிழக அரசும் செயலற்றுத்தான் இருக்கும்.

அஇஅதிமுக மட்டுமல்ல; இந்தியாவில் பல்வேறு கட்சிகள் ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பியிருக்கின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய பலவும் அப்படியே. திமுக, சிவசேனை, தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற கட்சிகளின் தலைவர் கள் தத்தம் குடும்பத்தவர்களைக் கட்சிக்குள் கொண்டுவந்து தொடர்ச்சியைக் கொடுத்துள்ளனர். அவ்வாறு வாரிசுகளைக் கொண்டுவர முடியாத பலரில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றோரைச் சொல்லலாம். இவர்கள் சட்டெனத் தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள்.

தோட்டத்திலிருந்து ஆட்சி நடக்கும்

தமிழகத்தின் ஆட்சி போயஸ் தோட்டத்திலிருந்து நடக்கும். ஜெயலலிதா விரும்பிய சட்டங்கள் அவரது பெயரால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும். திட்டங்கள் அம்மாவின் பெயராலேயே தொடரும் அல்லது புதிதாகக் கொண்டுவரப்படும். அவரது புகைப்படங்கள்தாம் அரசு விளம்பரங்களிலும் பெரிதாக இருக்கும். சோனியாவின் புகைப்படம் அப்படித்தான் மன்மோகன் சிங்கின் படத்துடன் கூடவே வெளியானது.

ஓ. பன்னீர்செல்வத் தின் புகைப்படத்தையும் நாம் கூடவே காணக் கூடும். அவ்வளவே. நீதிமன்றங்கள் இதில் தலையிட லாம். மற்றபடி தமிழக அரசு என்பதை வெளியிலிருந்து நடத்துவதில் ஜெயலலிதாவுக்குச் சிக்கலே இருக்காது.

கட்சி என்னவாகும்?

கட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு வருமா? கட்சி கலகலத்துப் போகுமா? இன்று மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளிலும் இதற்கு வாய்ப்பே இல்லை. அஇஅதிமுகவில் ஜெயலலிதா ஒருவர்தான் வாக்கு சேகரிக்கும் வல்லமை பெற்றவர். அவரை முன்வைத்துதான் இதுவரையில் அஇஅதிமுக ஜெயித்துள்ளது. இத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், கடுமையான தண்டனைக்குப் பிறகும், இப்படியேதான் நடக்கப்போகிறது. இம்முறை ஜெயலலிதா, தான் பொய் வழக்குகளுக்கு ஆளாகி அபாண்டமாகத் தண்டனை அனுபவிக்கவேண்டி வந்ததாகச் சொல்வார். வாக்குகளை அள்ளுவார். வழக்கு இழுத்துக்கொண்டே போகும்வரை ஜெயலலிதாவுக்குப் பிரச்சினை இல்லை.

ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அத்துடன் ஜெயலலிதாவின் அரசியல் முற்றுப்பெறலாம். அவ்வாறு நடைபெறாதவரை, அவரது உடலும் மனமும் சோர்வுறாத நிலையில், அவரது கைப்பிடிக்குள்தான் கட்சியும் ஆட்சியும் இருக்கும்!

- பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர் - விமர்சகர், தொடர்புக்கு: badri@nhm.in

கொஞ்சம் கொஞ்சமாகச் சரியும்!

கே.வி. சாஸ்திரி

வெகு நாட்களுக்கு முன் அமெரிக்கத் தூதர் ஒருவருடன் ஜெயலலிதாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. எவ்வளவோ தலைவர்களை அருகிலிருந்து பார்த்துப் பழகிய அவர், ஜெயலலிதாவின் மனோதிடமும் செயல்திறனும் அபாரமானது என்று வியந்து பேசிக்கொண்டிருந்தார். அதிமுகவை 25 ஆண்டுகளாக ஜெயலலிதா நிர்வகிக்கும் திறன், அதாவது அவருடைய ஆதிக்கத்தைப் பார்க்கும் எவரும் பிரமிக்காமல் இருக்க முடியாது. இந்தப் பிரமிப்புதான் பலரையும் அவர் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நிற்கவைக்கிறதோ என்றுகூட நான் நினைப்பது உண்டு. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, சிறை தண்டனையை ஜெயலலிதா எதிர்கொள்ளும் சூழலிலும், அவருடைய அரசியல் ஆதிக்கத்துக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று பலரும் நினைப்பதற்கும் அந்தப் பிரமிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.

தமிழக மக்களிடம் இந்தத் தீர்ப்பு இரக்க அலையை ஏற்படுத்தும்; ஜெயலலிதாவுக்கான ஆதரவு இன்னும் பல மடங்கு உயரும்; சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் அதிமுகவின் எண்ணிக்கையைப் புறக்கணிக்க முடியாத நிலையில், அவருடைய செல்வாக்குக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றெல்லாம் கணக்குப் போடுபவர்கள் இந்தப் பின்னணியிலேயே போடுகிறார்கள்.

காலம் மாறுகிறது

இப்போது பதவியில் இருக்கும் மோடி அரசுக்கு, ஜெயலலிதாவின் ஆதரவை நாட வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், அவருடைய செல்வாக்கை மைய அளவிலும் அவரால் தேக்கி வைத்துக்கொள்ள முடியும். இப்படியெல்லாம் கணக்குப் போடுகிறார்கள். ஆனால், ஒரு விஷயத்தை எல்லோரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்: காலம் மாறுகிறது.

இன்றைக்கு மக்களிடம் அனுதாப அலைகூட வீசலாம். அது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அப்படியே நீடிக்குமா?

ஜெயலலிதாவின் கட்சியினருக்கு இன்றைக்கு மிகப் பெரிய சவால் அவர்கள் முன் நிற்கிறது. இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், மக்களைப் பாதிக்கும் எவ்வளவோ பிரச்சினைகளில், அரசையும் நடத்த வேண்டும்; கட்சியையும் நிர்வகிக்க வேண்டும். இந்த இரு நிர்வாகமும் ஜெயலலிதா நேரடியாகக் களத்தில் இல்லாத சூழலில், தனித்து இயங்கி சாதித்துக்காட்ட வேண்டும். அவர்களால் முடியுமா? சந்தேகம்தான்.

இளைய தலைமுறையைக் கவனியுங்கள்

திமுக தொடர்ந்து ஒரு தவறைச் செய்துவருகிறது. அதாவது, மக்களிடையே - குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே - ஊழல் மீது ஏற்பட்டிருக்கும் கடுமையான வெறுப்பை அந்தக் கட்சி குறைத்து மதிப்பிட்டுவருகிறது. அதற்கான விலையைக் கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், இன்னும் தலையெடுக்க வழியில்லாமல் நிற்கிறது. இன்றைக்கு அதே தவறை அதிமுகவும் செய்கிறது. ஊழல் விஷயத்தில் மக்கள் திமுக - அதிமுக என்று பாகுபாடு காட்டப்போவதில்லை.

ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியானதில் தொடங்கி, அதிமுகவினர் நடத்தும் போராட்டங்கள் ஏற்படுத்தியிருக்கும் விளைவு என்ன? மக்களிடம் ஏற்பட்ட இயல்பான அனுதாபத்தையும் காலிசெய்து, அவர்களை அதிருப்தியை நோக்கித் தள்ளியிருப்பதுதான் ஒரே விளைவு. சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டிக்கும் முகமாக அதிமுகவினர் நடத்திவரும் அராஜகங்கள், நீதித் துறையையும், வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளையும் கண்டபடி அவதூறாக அவர்கள் தூற்றும் அவலங்கள் இவையெல்லாம் இந்திய நாட்டின் எல்லா நீதிபதிகளையுமே விரோதித்துக்கொள்ளக் கூடிய அநாகரிகங்கள் என்பதுகூடத் தெரியாமல்தானே அதிமுகவினர் அரசியல் செய்கின்றனர்? இங்கு நடக்கும் கூத்துகளையெல்லாம் பார்த்த என்னுடைய டெல்லி நண்பர்கள் பலர், “திராவிடக் கட்சிகள் என்றாலே அதிகாரத் துஷ்பிரயோகத்திலும் ஊழலிலும் அராஜகத்திலும் வன்முறையிலும் ஈடுபடுவதுதான் இயல்பா?” என்று கேட்டார்கள். நான் என்ன பதில் சொன்னேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இது.

இடைவெளி அதிகரிக்கும்

ஜெயலலிதாவுக்கும் அவருடைய கட்சியினருக்குமான உறவு நேரடியாக, அன்றாடத் தொடர்பில் இருப்பது அல்ல. இது எல்லோருக்கும் தெரிந்தது. இந்த வழக்கிலிருந்து விடுபடும் வரையிலான காலகட்டம் அவருக்கும் கட்சியினருக்குமான இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதேபோல, இன்னொருவர் முதல்வராக இருக்கும் வரை அதிமுகவினர் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதும் சந்தேகமே. இது மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே இடைவெளியை உருவாக்கும். இந்த இடைவெளியானது கட்சியையும் ஆட்சியையும் அவருடைய பார்வைக்கு அப்பாற்பட்டுக் கொண்டுசெல்லும். இது எல்லாவற்றுக்கும் மேல், முதல்வராக அமர்ந்திருக்கும் இன்னொருவர், எத்தனை நாட்களுக்குத் தாள் பணிந்தே செயல்படுவார் என்று சொல்ல முடியும்?

சிம்மசொப்பனம் இந்த வழக்கு!

ஜெயலலிதா இன்னும் கொஞ்ச நாட்களில் பிணையில் வந்துவிடலாம். ஆனாலும், பறிபோன முதல்வர் பதவி பறிபோனதுதான். அவர் முற்றிலும் நிரபராதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்குமேயானால், அவர் இன்னொரு ஆட்டம் விளையாடலாம். ஆனால், அது எத்தனை நாளில் சாத்தியமாகலாம் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்திலும் அவருடைய மேல்முறையீடு தோற்றுப்போகுமேயானால், அவருடைய ஆதிக்கம் முடிந்துவிட்டது என்றே கொள்ள வேண்டும்!

- கே.வி. சாஸ்திரி, அரசியல் விமர்சகர், கொள்கை வகுப்பாளர்.


ஜெயலலிதா செல்வாக்குஜெயலலிதாதமிழக அரசியல்சொத்துக் குவிப்பு வழக்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author