Published : 03 Feb 2014 08:11 PM
Last Updated : 03 Feb 2014 08:11 PM

என்ன செய்ய வேண்டும் என் தலைவர்?

நெல்லை சங்கரமணி, அ.தி.மு.க., சேலம்.

என் உடம்புல ஓடுறதே அ.தி.மு.க. ரத்தம்னு சொல்லலாம். அவ்வளவு விசுவாசி நான். எங்க கட்சியோட பொதுச்செயலாளர் அம்மாவோட தன்னம்பிக்கையே அவங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதனால, இப்போதுள்ள கூட்டணியே போதும். ஆனால், எக்காரணம் கொண்டும் அம்மா பா.ஜ.க-வோடயோ காங்கிரஸோடயோ தேர்தலுக்கு முன்போ பின்போ கூட்டணி சேரக் கூடாது. அம்மா... தைரியமா களம் இறங்குங்கும்மா. நீங்கதான் பிரதமர்னு முடிவு செஞ்சுட்டுக் காத்திருக்கோம்!

மாதையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முக்கண்டப்பள்ளி.

காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு மாற்று அணியா தேசிய அளவிலும் மாநில அளவிலும் இருக்கிறது இடதுசாரி இயக்கங்கள்தான். தமிழ்நாட்டுல எங்க கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணியில இருக்குறதை சிலர் விமர்சிக்கிறாங்க. இந்தத் தேர்தல்ல ஊழல் காங்கிரஸ், தி.மு.க-வுக்கு எதிரா மக்கள் மனநிலை இருக்கு. அதே மாதிரி மோடியையும் மதவாத பா.ஜ.க-வையும் வெறுக்குறாங்க. அதனால, சரியான கூட்டணிதான் அமைஞ்சிருக்கு தோழர்.

கே. முனியன், தி.மு.க., சங்கராபுரம்.

25 வருஷத்துக்கு மேல கட்சியில இருக்கேன். எல்லாக் கட்சிகளையும் மதிக்கக்கூடியவர் எங்க தலைவர் கலைஞர். இந்தத் தேர்தல்ல பல முறை கூட்டணிக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை எங்க தலைவர் அழைச்சுட்டார். ஆனா, அவர் பிடிகொடுக்கலை. கலைஞர் இதற்கு மேல் இறங்கி போகக் கூடாது. இப்போ இருக்கிற கூட்டணிக்கு என்ன குறைச்சல்? இதுவே போதும் தலைவரே. உத்தரவிடுங்க!

தணிகை குமார், பா.ஜ.க., கன்னியாகுமரி.

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாத்தி மாத்தி ஆண்டுதான் தமிழகத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டாங்க. இப்போதுதான் பா.ஜ.க-வால் மாற்றத்தைக் கொடுக்க முடியுற சூழல் உருவாகியிருக்கு. நாடு முழுக்க மோடி அலை வீசுது. தமிழ்நாட்டுலேயும் அது ஒரு சூறாவளியா வீசணும். அதுக்கு எங்க தலைவர்கள் தங்களுக்குள்ள பாகுபாடு பார்க்காம ஒத்துமையா வேலை செய்யணும்.

கணபதி, பா.ம.க., புதுச்சேரி.

இன்றைய தமிழகத்துக்குக் கட்டாயமாக மாற்று அரசியல் தேவை. மக்களும் சரி, எங்கள் அய்யாவும் சரி, திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாந்தது போதும். ஐயா எடுத்த முடிவை அப்படியே முன்னெடுக்கணும்!

மதியூகம், காங்கிரஸ், சேலம்.

நாங்க காமராஜரைப் பார்த்துட்டுக் கட்சிக்கு வந்தவங்க. இப்ப இருக்கிறவங்க எல்லாம் எங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க. அதுக்காக விட்டுற முடியுமாங்க? அய்யாவுக்காக உசுரு இருக்கிற வரைக்கும் உழைப்பேங்க. வயசான காலத்திலயும் தினமும் கட்சி ஆபீஸ் போய் சின்னச்சின்ன வேலைகளப் பார்த்துட்டு சாயங்காலம்தான் வீடு திரும்புவேனுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் கூட்டணியே வேணாமுங்க. என்னை மாதிரி உண்மையான காங்கிரஸ்காரன் தெருவுக்கு நாலு பேரு இருக்கானுங்கங்கிற உண்மை இந்தத் தேர்தல்ல வெளியே வரும்ங்க!

வினோத், விடுதலைச் சிறுத்தைகள், கடலூர்.

பா.ஜ.க. மதவாதக் கட்சி. பா.ம.க. சாதியவாதக் கட்சி. மதவாதமும் சாதியமும் எங்க கொள்கைக்கு எதிரானவை. இதை எதிர்த்துதான் எங்க போராட்டம். இந்தத் தேர்தல் ரெண்டையும் வீழ்த்துறதுக்கான களம். தலைவரே, உங்க வியூகத்துக்காகக் காத்திருக்கோம்.

ராமமூர்த்தி, தே.மு.தி.க., கமுதி.

தமிழ்நாட்டு மக்கள் இத்தனை நாள் எதுக்காக ஏங்கினாங்களோ, அப்படி ஒரு கூட்டணியை எங்க தலைவர் அமைக்கிறார். எப்படி சட்டப்பேரவைத் தேர்தல்ல எல்லோரையும் ஆச்சரியப்பட வெச்சோமோ அப்படி இந்த நாடாளுமன்றத் தேர்தல்லயும் ஆச்சரியப்பட வைப்போம் கேப்டன்.

சிவக்குமார், மார்க்சிஸ்ட் கட்சி, ஓசூர்.

ஏழை மக்களோட கட்சி எங்களது. மக்களைப் பாதிக்குற விலைவாசி மாதிரியான பிரச்சினைகள் மத்தியில மதச்சார்பின்மையைப் பாதுகாக்குற கடமையும் எங்களுக்கு இருக்கு. தமிழ்நாட்டுல நாங்க இப்போதைக்குத் தனிச்சு நிக்க முடியாது. அதனால, அ.தி.மு.க-வோட கூட்டணிங்குறது நல்ல முடிவுதான். எங்க பலத்தைக் களத்துல காட்டுவோம் தோழர்.

ஏ. ஆர். குலாம் முகம்மது, ம.தி.மு.க., மானூர்.

எங்க தலைவர் வைகோ இந்த தடவை பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைச்சதன் மூலமா ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கியிருக்கார். காங்கிரஸைத் தமிழகத்திலிருந்து வேரறுக்க எங்க தலைவர் எடுத்திருக்கிறது சரியான முடிவு. அதனால, இந்தக் கூட்டணி மேல வர்ற விமர்சனங்களை தலைவர் கண்டுக்க வேண்டாம்!





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x