

"என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை. எத்தகைய தோல்வி வந்தாலும் திமுக தேய்ந்து போய் விடாது."
திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரப்பூர் ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை காலையில் நிலைத்தகவல் இது.
திருச்சி சிவாவின் மனைவி மறைந்த தேவிகா ராணியின் படத் திறப்பு நிகழ்ச்சியில் பேசியதில் இருந்து, குறிப்பிட்ட இந்த ஸ்டேட்மென்டை மட்டும் தனது ஃபேஸ்புக் நிலைத்தகவலாக பதிந்திருக்கிறார் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்தபோதே ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம் அடுத்த திமுக தலைவர் யார் என்ற போட்டி.
தனக்கு பின்னர் ஸ்டாலின்தான் கட்சித் தலைமையை ஏற்று நடத்துவார் என்பதை பலமுறை கருணாநிதி வெளிப்படையாகவும், சில முறை சூசகமாகவும் சொல்லி வந்திருக்கிறார். அழகிரியும் கோபித்துக்கொள்வதும், கடிந்து கொள்வதும் பின்னர் கருணாநிதி 'கண்கள் பனித்தன' என்றும் உருகிப் பேசியதும் நடந்தேறியிருக்கின்றன.
ஆனால், மார்ச் மாதம் அந்த பெரிய அறிவிப்பு வெளியானது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு ஒழுங்கு நடவடிக்கையாக திமுகவில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவிக்கிறார். தொடர்ச்சியாக, அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கண் கலங்கி உருக்கமான பேட்டியும் அளிக்கிறார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ஸ்டாலின் பற்றி அழகிரி பேசிய அந்த வார்த்தைகள் மறக்கமுடியாது என வேதனை தெரிவிக்கிறார்.
அவ்வளவுதான், திமுக - அழகிரி உறவு, இனி ஸ்டாலின் ரூட் கிளியர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அழகிரி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று கூட பேசப்பட்டது.
இதற்கிடையில் மக்களவை தேர்தல் வருகிறது. வேட்பாளர் தேர்வே பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது, 10 ஆண்டு காலமாக கூட்டணியில் இருந்த காங்கிரசை கழற்றிவிட்டது நியாமம் இல்லை என அழகிரி விமர்சனம் செய்தார்.
சில மாதங்கள் பரபரப்பு குறைந்து போயிருந்த பிரச்சினை சூடு பிடித்தது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்ற பரபரப்பு. தயாளு அம்மாளை அழகிரி சந்தித்துப் பேசியது, சென்னையில் முகாமிட்டிருப்பது, சகோதரி செல்வி மூலம் சமாதானப் பேச்சு, சில நிபந்தனைகளுடன் மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க கருணாநிதி சம்மதித்ததாக தகவல் வெளியானது என திமுக அப்டேட்ஸ் குவிந்தது.
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் எம்.பி., சமீபத்தில் கருணாநிதியை சந்தித்தது. இதையெல்லாம் கிட்டத்தட்ட உறுதி செய்வதாகவே இருந்தது.
ஆனால், கருணாநிதிக்கு மீண்டும் செக். கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. அதனால், ஸ்டாலினை சமாதானப்படுத்தும் முயற்சிகளை கருணாநிதி மேற்கொண்டுள்ளார் என்பது புதிய செய்தி.
இப்படி, அழகிரிக்காக முடிவு எடுத்தால் ஸ்டாலின் எதிர்ப்பு, ஸ்டாலின் பக்கம் சாய்ந்தால் அழகிரி காட்டம் என முடிவில்லாமல் சென்று கொண்டிருக்க... "என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை. எத்தகைய தோல்வி வந்தாலும் திமுக தேய்ந்து போய் விடாது" என கருணாநிதி கூறியிருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் இந்த 'நிலைத்தகவல்' எந்த நிலையைச் சொல்கிறது?