Published : 08 Nov 2017 01:28 PM
Last Updated : 08 Nov 2017 01:40 PM
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, திடீரென இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் என்ற அறிவிப்பு பிரேக்கிங் நியூஸாக சென்றபோது யாரும் அறிந்திருக்கவில்லை அப்படி ஓர் அறிவிப்பு வரும் என்று. சற்று நேரத்தில் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நிமிடம் முதல் உங்கள் கைகளில் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1000 எல்லாம் செல்லாக்காசு என்றார். அதுதான் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி ’ஹார்ட் பிரேக்கிங்’ நியூஸாக இருந்தது.
அடுத்த நாள் முதல் வங்கிகளுக்குக் கூட்டம் அலைமோதியது. தியேட்டர், ரயில் நிலைய வரிசையைவிட ஏடிஎம் வாசல்களில் மக்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர். புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டாலும் அதற்கு சில்லறை பெற வேண்டுமே! சில்லறை தான் மாற்றமுடியவில்லை, அட செல்ஃபியாவது போடுவோமே என்று ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி போட்டவர்கள் ஏராளம்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க, இந்த பணமதிப்புநீக்க நடவடிக்கை என சொல்லப்பட்டது.
திருமண ஏற்பாடு செய்திருந்தவர்கள், சொந்தங்களை மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு காத்திருந்த உறவுகள், சிறு வியாபாரிகள், சாமானிய மக்கள் என பலரும் பதறி, அலறி, துடித்து, வேதனைப்பட்டனர்.
ஆனால், அந்த அளவுக்கு, மூட்டை மூட்டையாக பணத்தை பதுக்கியவர்களும், பெரும் பணக்காரர்களும், முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும், கவுன்சிலர், வட்டம், மாவட்டம் தொடங்கி மூத்த அரசியல்வாதிகளும் சிரமப்படவில்லை என்பதே சாமானியரின் சீற்றமாக இருந்தது.
அப்படியென்றால், எதற்காக, யாருக்காக இந்த பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது?! அது இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் விவாதப்பொருளாகவேகூட இருக்கலாம்.
அந்த விவாதத்தைவிட்டு, இங்கே நாம் ஒரு விவாதக் களத்துக்கு வருவோம்.
நவம்பர் 8 பணமதிப்பு நீக்கம் நன்மை பயத்தது / பயக்கும் என நீங்கள் நினைத்தால் அதை உறுதிப்படுத்த காரணங்களைப் பட்டியலிடுங்கள். இல்லை, அது ஒரு வெற்று அறிவிப்பு என நீங்கள் உணர்ந்திருந்தால் அதையும் இங்கே பகிருங்கள்.. அதற்கான விளக்கங்களுடன். பணமதிப்பு நீக்க சமயத்தில் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட வேதனை சூழலை இங்கே கொட்டித் தீர்க்கலாம்.
இவை எல்லாம், மக்கள் பார்வையில் பணமதிப்பு நீக்கம் என்னவாக இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் ஊடக வாயிலாக தெரிந்து கொள்ளவைக்கும் ஒரு முயற்சி.
உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.