

அரியலூர்: இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவருக்கும், இவரது சித்தப்பா கண்ணன் மகன் சுப்பிரமணியனுக்கும் (21) வீட்டுக்கு செல்வதில் பாதை பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் அரிவாளைக் கொண்டு ராஜாவை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸார், ராஜாவின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, கொலை செய்த சுப்பிரமணியன் மீதும், அவருக்கு தூண்டுதலாக செயல்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை உயிரிழந்த ராஜாவின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஆத்திரம் குறையாத உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.