

உள்படம்: தினேஷ்
செங்குன்றம்: செங்குன்றம் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை மதுபோதை இளைஞர் ஒருவர், பட்டாக் கத்தியால் வெட்ட முயன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பஸ் நிலையம், காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபோதையில் பட்டாக் கத்தியுடன் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த செங்குன்றம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர் என இருவர் சம்பவ இடம் விரைந்து, ரகளையில் ஈடுபட்ட இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களுடன் செல்ல மறுத்த இளைஞர், பட்டாக் கத்தியால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை வெட்ட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட அவர், தனது சீருடை பெல்ட்டை கழற்றி,சுழற்றி தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டார். தொடர்ந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களின் உதவியுடன் போதை இளைஞர் மடக்கிப் பிடிக்கப்பட்டு, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் நாரவாரிகுப்பம், ரெட்டமலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்த தினேஷ் (24) என்பது தெரியவந்தது.
தினேஷ் மதுபோதையில் இருந்ததால், மறுநாள் (அக்.6) காலை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் எனக்கூறி, அவரை போலீஸார் வீட்டுக்கு அனுப்பினர். அங்கிருந்து சென்ற தினேஷ் தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தினேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் மதுபோதையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பட்டாக் கத்தியால் வெட்ட முயன்ற சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.